தினமணி 05.05.2010
மதுரையில் கெட்டுப்போன உணவைச் சாப்பிட்ட புதுச்சேரி கல்லூரி மாணவர் சாவு எதிரொலி: ஹோட்டல் அதிபர் உள்ளிட்ட 2 பேர் கைது
மதுரை, மே 4: மதுரையில் ஹோட்டலில் கெட்டுப்போன உணவை சாப்பிட்ட நிலையில் புதுச்சேரி பொறியியல் கல்லூரி மாணவர் உயிரிழந்தார். இதையடுத்து ஹோட்டல் அதிபர் உள்ளிட்ட 2 பேரை போலீஸôர் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர். மூன்று கடைகளுக்குச் “சீல்‘ வைக்கப்பட்டது.
புதுச்சேரி நல்லவாடு தில்லையம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த ஜெயேந்திரன் மகன் இசையமுதன் (21). தீ பாதுகாப்பு குறித்த படிப்பை கடலூர் பகுதி பொறியியல் கல்லூரியில் படித்து வந்தார்.
தீயணைப்பு குறித்த நேரடி பயிற்சிக்காக மாணவர்கள் இசையமுதன் மற்றும் அகிலன், முருகவேல், அருண் ஆகியோர் மதுரை வந்தனர். அவர்கள் கடந்த 1-ம் தேதி மதுரை ரயில் நிலையம் எதிரே உள்ள சிவபார்வதி சைவ உணவகத்தில் பொங்கல், இட்லி சாப்பிட்டனர்.
இந்த நிலையில் அனைவருக்கும் வயிற்றுப்போக்கு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அரசு மருத்துவமனையில் கடந்த 2-ம் தேதி சிகிச்சைக்கு சேர்ந்தனர். ஆனால், சிகிச்சை பலனின்றி இசையமுதன் இறந்தார். அவரது உடல் பிரேதப் பரிசோதனைக்குப் பிறகு பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது.
இதுகுறித்து திடீர்நகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் தங்கவேல் வழக்குப் பதிந்துள்ளார். மாணவர் பிரேதப் பரிசோதனை அறிக்கை இன்னும் ஒரு வாரத்தில் வரும்.
எனினும் கெட்டுப்போன உணவை சாப்பிட்ட நிலையில்தான் வயிற்றுப்போக்கு ஏற்பட்டு இசையமுதன் இறந்திருக்கலாம் என மருத்துவ வட்டாரங்கள் கூறியுள்ளன.
இதையடுத்து சம்பந்தப்பட்ட ஹோட்டல் அதிபர் சுப்பையா, ஊழியர் ஜெயசீலன் ஆகியோரை திடீர்நகர் போலீஸôர் கைது செய்தனர்.
அவர்கள் மீது இந்திய தண்டனை சட்டப் பிரிவு 273 கெட்டுப்போன உணவுப் பண்டங்களை பணத்துக்காக விற்பனை செய்வது, 304 (ஏ) அஜாக்கிரதையாக உள்நோக்கமின்றி மரணத்தை விளைவிப்பது ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிந்துள்ளனர்.
கைதானவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு சிறைக்காவலுக்கு அனுப்பப்பட்டனர். இந்த நிலையில் சம்பந்தப்பட்ட ஹோட்டலுக்கு போலீஸôர், வருவாய்த் துறை அதிகாரிகள், மாநகராட்சி சுகாதாரத் துறை அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை சீலிட்டு நடவடிக்கை எடுத்தனர். இது தவிர மேலும் இரு கடைகளுக்கும் சீல் வைக்கப்பட்டது.