தினமணி 05.05.2010
செம்மொழி மாநாடு: மே இறுதிக்குள் 44 நவீன பூங்காக்கள் தயார்
கோவை, மே 4: உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டையொட்டி கோவை நகரில் அமைக்கப்படும் 44 நவீன பூங்காக்களும் மே இறுதிக்குள் முடிவடைந்துவிடும் என மாநகராட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.
செம்மொழி மாநாட்டையொட்டி கோவை நகரை அழகுப்படுத்தும் பணியில் மாநகராட்சி நிர்வாகம் தீவிரமாக இறங்கியுள்ளது. நகரின் மைய பகுதிகளில் இருக்கும் ரிசர்வ் சைட்களில் 44 நவீன பூங்காக்கள் அமைக்கும் பணி ரூ.8 கோடியில் நடைபெற்று வருகிறது.
இதுவரை 4 பூங்காக்கள் அமைக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள 40 பூங்காக்களில் 15 பூங்காக்கள் அமைக்கும் பணி இன்னும் 10 நாட்களில் நிறைவடைந்துவிடும். மீதமுள்ள 25 பூங்காக்கள் அமைக்கும் பணியை மே இறுதிக்குள் முடிக்க மாநகராட்சி நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.
மனதை ரம்மியப்படுத்தும் பசுமை நிறைந்த புல்வெளிகளுடன் கூடிய இயற்கை சூழலில் இப்பூங்காக்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. குழந்தைகள் விளையாடி மகிழ சறுக்குகள், ஊஞ்சல்கள், குதுகலப்படுத்தும் செயற்கை நீரூற்றுகள், நீர்வீழ்ச்சிகள், முதியோர்கள் ஓய்வெடுக்கும் வகையிலான பெஞ்ச்கள், இளைஞர்கள், முதியவர்கள் நடைப்பயிற்சி மேற்கொள்ளும் வகையிலான நடைபாதைகள் உள்ளிட்டவை இப்பூங்காக்களில் இருக்கும் சிறப்பு அம்சங்கள்.
சாலையோர பூங்காக்கள்:ரேஸ்கோர்ஸில் இரு இடங்கலில் சாலையோர பூங்காக்கள் ரூ.97.85 லட்சத்தில் நடைபெற்று வருகின்றன. இவற்றிலும் நடைப்பயிற்சி சாலைகள், குழந்தைகளுக்கான விளையாட்டு உபகரணங்கள் உள்ளிட்ட வசதிகள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன.
மாநாட்டு ஊர்வலம் நடைபெறும் அவிநாசி சாலை, திருச்சி சாலைகளில் முக்கிய சந்திப்புகளில் நீர்வீழ்ச்சிகள், உயர்கோபுர விளக்குகள், சாலையோர பூங்காக்கள் உள்ளிட்டவை அமைக்கப்பட்டு அழகுப்படுத்தப்பட்டு வருகின்றன.
அவிநாசி சாலையில் காளப்பட்டி முதல் கோவை நகரின் மைய பகுதி வரை புதிதாக 275 மின்கம்பங்களும், திருச்சி சாலையில் 151 மின்கம்பங்களும் அமைக்கப்பட்டு வருகின்றன.
இதுதவிர திருச்சி சாலை மற்றும் அவிநாசி சாலையில் ஒவ்வொரு 100 மீ இடைவெளிக்கு இடையேயும் நவீன ஒளிரும் விளக்குகளும் பொருத்தப்பட்டு வருகின்றன. இப் பணிகள் அனைத்தும் ஜுன் முதல் வாரத்துக்குள் முடிக்கப்பட்டுவிடும் என்கின்றனர் மாநகராட்சி அதிகாரிகள்.
கோவை மக்களின் பொழுதுபோக்குக்காக இதுவரை வ.உ.சி. பூங்கா மட்டும் தான் இருந்தது. நகரில் புதிதாக 44 பூங்காக்கள் உருவாக்கப்படுவதால் கோவை மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.