தினமணி 14.05.2010
காலாவதியான பொருள்களை விற்றால் கடும் நடவடிக்கை: ஆட்சியர் எச்சரிக்கை
விழுப்புரம், மே 13: காலாவதியான பொருள்களை இருப்பு வைத்திருந்தாலோ, விற்றாலோ கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் ஆர். பழனிச்சாமி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
“”உற்பத்தி தேதி, அதிகபட்ச விற்பனை விலை, எடை, உற்பத்தியாளர் பெயர், முகவர் ஆகியவை குறிப்பிடாத பொட்டலப் பொருள்களின் விற்பனை தடை செய்யப்பட்டுள்ளது.
நிறுவனங்கள் மற்றும் கடை நிர்வாகிகள் கடைகளிலிருந்தும் கிடங்குகளிலிருந்தும் காலாவதியான பொட்டலப் பொருள்களை அகற்றி, அழித்துவிட வேண்டும். மாறாக, சில இடங்களில் சட்ட விரோதமாக சிறு வணிகர்களிடம் விற்றுவிடுவதாகத் தகவல்கள் கிடைக்கின்றன. இது சட்டவிரோதமானது.
உற்பத்தி தேதி மற்றும் காலாவதியாகும் தேதி ஆகியவை குறிப்பிடப்படாத, பொட்டலமிடப்பட்ட பொருள்கள் விற்கப்பட்டால் சம்பந்தப்பட்ட உற்பத்தியாளர் மற்றும் விற்பனையாளர் மீது சட்டபூர்வ நடவடிக்கை எடுக்கப்படும்.
தரக் குறைவான அல்லது காலாவதியான பொட்டலப் பொருள்கள் விற்கப்படுவதாக பொதுமக்கள் அல்லது நுகர்வோர் அமைப்புகள் தகவல் அறிந்தால், மாவட்ட ஆட்சியரிடமோ, மாநில நுகர்வோர் சேவை மையத்தை 044-28592828 என்ற தொலைபேசி எண்ணுக்குத் தொடர்புகொண்டோ புகார் அளிக்கலாம். மேலும், schtamilnadugmail.com, www.consumer.tn.gov.in என்ற இணைய தளங்களில் புகார்களைப் பதிவு செய்யலாம்.”