தினமலர் 15.05.2010
தஞ்சையில் 2,100 நாய்க்கு கு.க., ஆப்ரேஷன்
தஞ்சாவூர்: தஞ்சையில் இரண்டாயிரத்து 100 நாய்களுக்கு குடும்பக்கட்டுப்பாடு சிகிச்சை செய்யப்பட்டது. தஞ்சை நகரில் கடந்த சில நாட்களாக தெரு நாய்களை பிடித்து குடும்பக்கட்டுப்பாடு சிகிச்சை வழங்கும் பணி நடந்து வருகிறது. நேற்று தஞ்சை புது ஆற்றங்கரை, நீதிமன்றம் ரோடு போன்ற பகுதியில் நாய்களை பிடித்து கூண்டு வண்டியில் அடைத்தனர்.
பின், அவற்றுக்கு மொத்தமாக குடும்பக்கட்டுப்பாடு சிகிச்சை செய்தனர். தஞ்சை நகராட்சி நகர்நல அலுவலர் அர்ஜுன்குமார், ”கடந்த சில நாட்களாக நாய்கள் பிடிக்கப்பட்டு குடும்பக்கட்டுப்பாட்டு சிகிச்சை செய்யப்படுகிறது. இதுவரை இரண்டாயிரத்து 100 நாய்கள் பிடிக்கப்பட்டு குடும்பக்கட்டுப்பாட்டு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இப்பணி தொடர்ந்து நடக்கும். இதனால், தெருநாய் பெருக்கம் குறைந்துள்ளது. நாங்கள் எந்த நாயை எந்த இடத்தில் பிடிக்கிறோமோ அதே இடத்தில் மீண்டும் விட்டுவிடுவோம். இந்த சிகிச்சையால் நாய் இறப்பு ஏற்படாது,” என்றார்.