தினகரன் 20.05.2010
நகராட்சி கவுன்சிலின் ‘போசர்’ வாகனத்தால் பசுமை பெறும் மரங்கள்
புதுடெல்லி, மே 20: புதுடெல்லி நகராட்சி கவுன்சில் வாங்கியுள்ள நவீன போசர் வாகனத்தால் மரங்கள், தூசுகளை இழந்து பசுமை பெற்று வருகின்றன.
‘சுத்தமான நகரம்; பசுமையான நகரம்’ என்று புதுடெல்லி நகராட்சி கவுன்சில் ஆங்காங்கே விளம்பரம் செய்துள்ளதை பார்த்திருக்கலாம். யாராவது பசுமையான நகரத்தை ஏற்படுத்த என்ன முயற்சி மேற்கொண்டீர்கள் என்று இனி நகராட்சி கவுன்சிலை பார்த்து கேட்க முடியாது.
ஏனெனில், நகராட்சி கவுன்சில் பகுதியில், உள்ள மரங்களில் உள்ள தூசுகளையும், அழுக்குகளையும் அகற்றி அவற்றை பசுமையாக்க அதிநவீன வாகனத்தை வாங்கி அதை தினமும் இயக்கியும் வருகிறது.
டெல்லியில் பெருகி வரும் வாகனத்தால் புகை, தூசி, அழுக்குகள் மிக அதிகமாக உள்ளன. இதனால் பசுமையான மரங்கள் கூட நிறம்மங்கி காணப்படுகின்றன. எப்போதாவது மழை பெய்யும்போது, இந்த மரங்களா இவ்வளவு நிறம் மாறியிருந்தது என்று வியக்கும் அளவுக்கு தூசி, அழுக்குகளால் நிறம் மாறிக்கிடக்கின்றன.
இந்நிலையில், மரங்களுக்கு புத்துணர்ச்சி அளித்து அவற்றின் பசுமையை காப்பதற்காக ‘வாட்டர் போசர்’ என்ற நவீன வாகனத்தை நகராட்சி கவுன்சில் வாங்கியுள்ளது.இதில் அழுத்தத்தை கூட்டியோ, குறைத்தோ தண்ணீரை பீய்ச்சி அடிக்க முடியும். இதன்படி, ஒவ்வொரு பகுதியாக சென்று அங்கு மழை போல் ஒரே நேரத்தில் தொடர்ச்சியாக இருக்கும் மரங்கள் மீது தண்ணீர் பீய் ச்சி அடிக்கப்படுகிறது. அதிக அழுக்கு இருப்பதாக கருதப்படும் மரங்களுக்கு தனியாக தண்ணீர் பீய்ச்சப்படுகிறது. சுருக்கமாக சொன்னால் மரங்களை குளிப்பாட்டப்படுகின்றன. இதனால் ஒரு சில நிமிடங்களில் மரங்கள் பச்சை பசேல் என்று கண்ணுக்கு விருந்தாக காட்சியளிக்கின்றன.
இந்த போசர் வாகனம் காலையில் 7 மணி முதல் 9 மணி வரையிலும், மதியம் 3 மணி முதல் 5 மணி வரையிலும் இயக்கப்படுகிறது. நகராட்சி கவுன்சிலின் தீயணைப்பு பிரிவு வீரர்கள் இப்பணியை மேற்கொள்கின்றனர்.
போசர் வாகனத்தின் இன்னொரு விசேஷம், இதை தீயணைப்பு வாகனமாகவும் பயன்படுத்தலாம். மொத்தம் 12,000 லிட்டர் தண்ணீர் நிரப்பும் வசதிக் கொண்ட போசரில், 13.5 மீட்டர் உயரம் வரை நீளும் தன்மை கொண்ட ஏணி உள்ளது. இது தவிர சாக்கடை அடை ப்பு ஏற்பட்டால், அங்கிருந்து தண்ணீரை உறிஞ்சி அதை சரி செய்ய முடியும். இப்படி பல்முறை பயன்பாட்டுக்கு உரிய வகையில் போசர் வாகனம் அமைந்துள்ளது.
கடந்த திங்கட்கிழமை தொடங்கி வைக்கப்பட்ட இந்த வாகனத்தின் மூலம் நேற்று முன்தினம் நிதி மார்க் பகுதியில் உள்ள மரங்கள் குளிப்பாட்டப்பட்டன.
இதுகுறித்து நகராட்சி கவுன்சிலின் தலைமை தீயணைப்பு அதிகாரி ஜஸ்பீர் சிங் கூறுகையில், “மரங்களை குளிப்பாட்டுவதற்காக வாங்கப்பட்ட நவீன வாகனம் இது. இதுவரையில் வேறு எந்த நகரிலும் இதுபோன்ற முயற்சி எடுக்கப்படவில்லை. தினமும் ஒரு பகுதியை தேர்ந்தெடுத்து, அங்கு மரங்களை சுத்தம் செய்து வருகிறோம். இதன் மூலம் தீயணைப்பு வீரர்களும் பயிற்சி பெற முடிகிறது” என்றார்.