தினமலர் 24.05.2010
பொய் சொல்லும் தொண்டு நிறுவனங்கள்: மேயர் அறிவுரை
சென்னை : “”எதையுமே செய்யாமல், அதை செய்தோம், இதை செய்யப் போகிறோம் என்று பொய் சொல்லி விளம்பரம் தேடும் தொண்டு நிறுவனங்கள், சென்னையில் நிறைய உள்ளன. இவர்கள் சொல்வதை கேட்டு பொதுமக்கள் ஏமாந்து விட வேண் டாம்,” என்று சென்னை மாநகர மேயர் சுப்ரமணியன் கூறினார்.சென்னை கொரட்டூரில் இயங்கி வரும் குழந்தைகள் பாதுகாப்பு இல்லத்தில், எய்ட்ஸ் மற்றும் எச்.ஐ.வி.,யால் பாதிக்கப் பட்டவர்களின் 18 குழந்தைகள் பாதுகாக்கப்பட்டு, அவர்களுக்கு கல்வியும் அளிக்கப்பட்டு வருகிறது.
இம்மையத்திற்கு புதிய கட்டடம் கட்டுவதற்கு நிதி திரட்டும் விழா நேற்று சென்னையில் நடந்தது. விழாவில் கலந்து கொண்டு சென்னை மாநகர மேயர் சுப்ரமணியன் பேசும் போது, “”எதையுமே செய்யாமல் அதை செய்தோம், இதை செய்யப் போகிறோம் என்று பொய் சொல்லி விளம்பரம் தேடும் தொண்டு நிறுவனங்கள், சென்னையில் நிறைய உள்ளன.
மக்கள் இவர்கள் சொல்வதை கேட்டு ஏமாந்து விட வேண்டாம். எய்ட்ஸ் மற்றும் எச்.ஐ.வி.,யால் பாதிக்கப்பட்டவர்களின் 18 நல்ல குழந்தைகளுக்கு, கொரட்டூரில் தனியார் மூலம் துவங்கப் பட்டுள்ள இந்த குழந்தைகள் பாதுகாப்பு சேவை மையத்தின் மூலம் நல்வாழ்வு அளிக்கும் வகையில் சேவை செய்யப் பட்டு வருகிறது. இந்நிறுவனம் இன்னும் பலருக்கு உதவ வேண்டும்.நான் சென்னையில் முன்னர் கலந்து கொண்ட விழா ஒன்றில், தொண்டு நிறுவனத்தைச் சேர்ந்தவர் என கூட்டத்தினரிடம் அறிமுகம் செய்து கொண்டு ஒருவர் மேடையில் பேசும் போது, “சென்னை மாநகராட்சியில் உள்ள 50 பள்ளிகளுக்கு சுத்தப்படுத்தப்பட்ட குடிநீர் வழங்குவதற்கு, “வாட்டர் பில்டர் மிஷின்’ ஒரு கோடி ரூபாய் செலவில் வழங்கியுள் ளோம்’ என்று கூறினார்.எனக்கு ஆச்சரியமாக இருந்தது. பிறகு அவரிடம், எந்த பள்ளிகளுக்கு செய்திருக்கிறீர்கள் என விவரம் கேட்ட போது, மக்களிடம் தங்கள் தொண்டு நிறுவனத் திற்கு விளம்பரம் தேடுவதற்காக பேசப் பட்டது தெரிய வந்தது. இனிமேல் இப்படி பேசாதீர்கள் என்று கண்டித்து அனுப்பினேன். உண்மையிலேயே நற் தொண்டு புரியும் நிறுவனங்களுக்கு மதிப்பு கொடுங்கள்.போலி சேவை நிறுவனங்களிடம் யாரும் ஏமாந்து விடாதீர்கள்.இவ்வாறு சுப்ரமணியன் பேசினார்.விழாவில், நிருத்ய கலாலயா மாணவியளின் பரதநாட்டியம் மற்றும் கலை நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டன.