தினகரன் 24.05.2010
வர்த்தக நிறுவனங்களுக்கு தமிழில் பெயர் பலகை 31ம் தேதி வரை கெடு
ஆலந்தூர், மே 24: “வர்த்தக நிறுவனங்களில் 31ம் தேதிக்குள் தமிழில் பெயர் பலகை வைக்காவிட்டால் நடவடிக்கை எடுக்கப்படும்,” என்று மேயர் சுப்பிரமணியம் எச்சரித்துள்ளார்.
ஈக்காட்டுதாங்கல் அம்பாள்நகர் பகுதியில் 100 கடைகளில் தமிழ் பெயர் பலகை திறப்பு விழா நேற்று காலை நடந்தது. பெயர் பலகைகளை சென்னை மாநகராட்சி மேயர் மா.சுப்பிரமணியம் திறந்துவைத்தார். அப்போது அவர் பேசியதாவது:
தமிழுக்கு முக்கியத்துவம் தரவேண்டும் என்ற எண்ணத்தில் முதல்வர் கருணாநிதி, துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் தமிழில் பெயர்ப்பலகை வைக்க உத்தரவிட் டனர். இதன்படி, சென்னையில் உள்ள கடைகள், வர்த்தக நிறுவனங்களில் தமிழில் பெயர்ப்பலகை வைக்க நடவடிக்கை எடுக்கப் பட்டுள்ளது. பெயர் பலகையில் முதலில் தமிழ் இடம்பெற வேண்டும். அடுத்ததாக எந்த மொழியையும் எழுதிக்கொள்ளலாம்.
கோவையில் ஜூன் 23ம் தேதி முதல் 27ம் தேதி வரை செம்மொழி மாநாடு நடைபெற உள்ளது. இதில் பல்வேறு நாடுகளை சேர்ந்தவர்கள் கலந்துகொள்ள வருகின்றனர். இதனால் அனைத்து பகுதியிலும் தமிழில் பெயர்ப்பலகை இருந்தால் பெருமையாக இருக்கும். இதற்கு வணிகர் சங்கங்கள் ஆதரவு தெரிவித்துள்ளன. வரும் 31ம் தேதிக்குள் அனைத்து கடைகளிலும் தமிழில் பெயர்ப்பலகை வைக்கவேண்டும். கெடுவுக்கு பிறகு தமிழ் இல்லாத பெயர் பலகையை மாநகராட்சி ஊழியர்கள் அகற்றுவார்கள். சம்பந்தப்பட்ட கடைகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு மேயர் பேசினார். தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பொதுச்செயலாளர் மோகன், மாவட்ட செயலாளர் ஜோதிலிங்கம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.