தினகரன் 24.05.2010
உலகத் தமிழ் செம்மொழி மாநாடு பணிகளை விரைவுபடுத்த துணை முதல்வர் உத்தரவு
கோவை, மே 24: கோவையில் ஜூன் 23 முதல் 27ம் தேதி வரை உலகத் தமிழ் செம்மொழி மாநாடு நடக்கிறது. இன்னும் 30 நாட்கள் மட்டுமே உள்ள நிலையில், பணிகளை ஆய்வு செய்ய முதல்வர் கருணாநிதி, இன்று கோவை வருகிறார். இதற்கிடையே, துணை முதல்வர் ஸ்டாலின் நேற்று கோவை வந்து மாநாட்டு பணிகளை ஆய்வு செய்தார்.
கோவையில் நேற்று காலையில் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடந்த ஆய்வுக் கூட்டத்தில், அமைச்சர்கள் பொங்கலூர் பழனிச்சாமி, வெள்ளகோவில் சாமிநாதன், மாநாட்டு தனி அதிகாரி அலாவுதீன், நகராட்சி மற்றும் குடிநீர் வழங்கல் துறை செயலர் நிரஞ்சன்மார்டி, நகராட்சி நிர்வாக இயக்குநர் செந்தில்குமார், கலெக்டர் உமாநாத், மாநகராட்சி கமிஷனர் அன்சுல் மிஸ்ரா, மாநகர போலீஸ் கமிஷனர் சைலேந்திரபாபு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
கோவை மேட்டுப்பாளையம் சாலையில் ரூ.60 கோடியில் அமைக்கப்படும் புதிய பஸ் ஸ்டாண்ட், கவுண்டம்பாளையம்&வடவள்ளி கூட்டு குடிநீர் திட்டம், ரூ.60 கோடியில் மின்கம்பிகளை பூமிக்கு அடியில் புதைத்தல், செம்மொழி பூங்கா அமைப்பது உள்ளிட்ட திட்டப்பணிகளின் முன்னேற்றம் குறித்து அதிகாரிகளிடம் ஸ்டாலின் கேட்டறிந்தார். தாமதமாகும் பணிகளை விரைவுபடுத்த அறிவுறுத்தினார்.
பின்னர், மாநாட்டு பேரணியில் இடம் பெறவுள்ள அலங்கார ஊர்திகள் தயாராகும் வஉசி பூங்காவுக்கு சென்ற ஸ்டாலினிடம், ஊர்திகள் குறித்து கலெக்டர் உமாநாத் விளக்கினார். இதைத் தொடர்ந்து, அவிநாசி ரோட்டில் ஊர்வலம் நடக்கும் பாதையில் முக்கிய விருந்தினர்களுக்கான மேடை அமைக்கப்படும் இடங்களை ஸ்டாலின் பார்வையிட்டார். அவிநாசி சாலையில் ரயில்வே மேம்பாலப் பணி உள்பட பல்வேறு பணிகளையும் ஸ்டாலின் நேற்றே ஆய்வு செய்தார்.
மாநாடு நடைபெறும் கொடிசியா வளாகத்தில் 4 லட்சம் சதுர அடியில் பந்தல் அமைப்பது உள்ளிட்ட பணிகளில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்து அதிகாரிகளிடம் திருப்தி தெரிவித்தார். அனைத்து கட்டமைப்பு பணிகளும் விரைவில் முடிக்கவேண்டும் என்று அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.