தினமலர் 25.05.2010
மழை நீர் சேகரிப்பை ஊக்குவிக்க விருதுகள்: ஜூன் 15ம் தேதிக்குள் விண்ணப்பிக்க அழைப்பு
திருநெல்வேலி:மழை நீர் சேகரிப்பை ஊக்குவிக்கும் வகையில் வழங்கப்படும் விருதுகளை பெற வரும் ஜூன் மாதம் 15ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.நில நீர் சேமிப்பை ஊக்குவிப்பதற்கு மத்திய நீர் வளத் துறை நில நீர் செறிவூட்டும் விருது மற்றும் தேசிய நீர் வள விருது ஆகியவற்றை வழங்க முடிவு செய்துள்ளதுநெல்லை மாவட்டத்தில் மழை நீர் சேகரிபபு மற்றும் செயற்கை முறையில் நில நீரை சிறப்பாக சேகரிக்கும் நிறுவனங்களிடமிருந்து கிராமப்புற மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளிடமிருந்தும் உரிய விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
அரசு சாரா நிறுவனங்கள், கிராம பஞ்.,கள், நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள், விவசாய மேம்பாட்டு நிறுவனங்கள், தனியார் நிறுவனங்கள், தனி நபர்கள் மற்றும் பயிற்சி நிறுவனங்கள் விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம்.இதுதொடர்பாக தகுதியான தனி நபர்கள்/நிறுவனங்கள்/கிராமப்புற மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி நிறுவனங்கள் தகுந்த ஆதாரத்துடன் வீடியோ படங்கள், போட்டோக்கள் மற்றும் பவர் பாயின்ட் கம்ப்யூட்டர் பதிவு படங்களுடன் “மாவட்ட கலெக்டர் அலுவலகம் (வளர்ச்சி பிரிவு), நெல்லை – 9′ என்ற முகவரிக்கு வரும் ஜூன் மாதம் 15ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.