தினமலர் 25.05.2010
நிலுவைத் தொகை கிடைக்காத மதுரை மாநகராட்சி ஊழியர்கள்
மதுரை: மதுரை மாநகராட்சி ஊழியர்கள், ஆறாவது சம்பள கமிஷன் நிலுவை தொகையை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். ஆறாவது சம்பள கமிஷன் நிலுவை தொகை, அரசு ஊழியர்களுக்கு வழங்கப் பட்டது. மாநகராட்சி ஊழியர்களில் சுகாதார பணியாளர்களுக்கு மட்டுமே இதுவரை முழு தொகை கொடுக்கப்பட்டுள்ளது. குடிநீர், பொறியியல், தெரு விளக்கு பிரிவு ஊழியர்கள், இளநிலை பொறியாளர் , சுகாதாரஆய்வாளர்கள் என 1300 பேருக்கு இன்னமும் நிலுவைத் தொகை வழங்கப்படவில்லை. மாநகராட்சியில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற 434 ஊழியர்களுக்கு, பென்ஷன், விடுப்பு சம்பளம் போன்ற ஓய்வூதிய பலன்கள் வழங்கப்படவில்லை. மாநகராட்சி ஊழியர்கள் சங்க தலைவர் முகம்மது ரபீக் கூறும்போது, “”இக் கோரிக்கைகளை வலியுறுத்தி, ஒரு நாள் விடுப்பு போராட்டம் நடத்த முடிவு செய்திருந்தோம். மாநகராட்சி பணிகள் பாதிக்கப்படக் கூடாது என்பதற்காக, அதை மாற்றி, மே 28ம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளோம்‘” என்றார்.