தினமலர் 26.05.2010
சுகாதாரமற்ற ஹோட்டல்களுக்கு “சீல்‘ ஐந்து தனிப்படை அலுவலர்கள் அதிரடி
அரியலூர்: அரியலூரில் சுகாதாரமற்ற ஹோட்டல்கள் இழுத்துமூடி சீல்‘ வைக்கப் பட்டுள்ளது. அரியலூர் மாவட்டத்திலுள்ள ஹோட்டல்களில் மக்களுக்கு சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்தும் வகையில், சுகாதாரம் இல்லாத சமையல் அறைகள் மற்றும் சுகாதாரமற்ற பாத்திரங்களில் உணவு பொருட்கள் தயாரித்து வழங்குவதாக வந்த புகார்களின் அடிப்படையில், முதல் கட்டமாக அரியலூர் நகரில் உள்ள ஹோட்டல்களின் சுகாதாரம் பற்றி ஆய்வு நடத்தும் படி அதிகாரிகளுக்கு அரியலூர் கலெக்டர் ஆபிரகாம் உத்தரவிட்டார்.
தொடர்ந்து அரியலூர் ஆர்.டி. ஓ., ஜீவரத்தினம், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் வேலுசாமி, மாவட்ட வழங்கல் அலுவலர் சிவராசு, பஞ்சாயத்துகளின் உதவி இயக்குநர் சடையப்ப விநாயகமூர்த்தி, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (சத்துணவு திட்டம்) ராம் மனோகர் லோகியா உள்ளிட்ட ஐந்து பேர் தலைமையிலான ஆய்வுக்குழு, அரியலூர் நகரிலுள்ள பல்வேறுஹோட்டல்களிலும் நேற்று திடீர்ஆய்வு மேற்கொண்டது.
அரியலூர் ஆர்.டி.ஓ., ஜீவரத்தினம் தலைமையில் செயல்பட்ட தாசில்தார்கள் பாலாஜி, மகேஸ்வரன், அரசு மருத்துவமனை டாக்டர்கள் சிவக்குமார், ரமேஷ், நகராட்சி நிர்வாக அலுவலர் சமயச்சந்திரன் உள்ளிட்ட குழுவினர், அரியலூர் பஸ்ஸ்டேண்டிலுள்ள சந்த்ரபவன், மாலா டிபன் செண்டர், சரவணா ஜூஸ் கடை மற்றும் செந்துறை ரோடு, தேரடி உள்பட பல இடங்களில் உள்ள ஹோட்டல்களில் அதிரடி ஆய்வு நடத்தினர்.
பஸ்ஸ்டாண்டு பகுதியில் சுகாதாரம் இல்லாமல் செயல்பட்ட மதியழகன் உணவகம், தேரடி அருகே சுப்ரமணியன் ஹோட்டல், செந்துறை ரோடு ஆனந்தபவன் ஹோட்டல் ஆகியவற்றை இழுத்து பூட்டி “சீல்‘ வைத்தனர்.செந்துறை ரோட்டில் துரு பிடித்த பாத்திரத்தில் பழச்சாறு தயாரித்து வைத்திருந்த எஸ்.எஸ்.கே. பழமுதிர்சோலை உள்ளிட்ட நான்கு கடைகளுக்கு “சீல்‘ வைத்தனர்.
அரியலூர் மார்க்கெட் தெருவில் சுகாதாரம் இல்லாமல் செயல்பட்ட, மதுரை முனியாண்டி விலாஸ் ஹோட்டலுக்கு, பஞ்சாயத்துகளின் உதவி இயக்குநர் சடையப்ப விநாயகமூர்த்தி “சீல்‘ வைத்தார். மாவட்ட வழங்கல் அலுவலர் சிவராசு தலைமையிலான குழுவினர் சுகாதாரம் இல்லாமல் செயல்பட்ட ஐந்து ஹோட்டல்களுக்கு “சீல்‘ வைத்தனர்.