தினமலர் 02.06.2010
கவுண்டம்பாளையம் – வடவள்ளி கூட்டு குடிநீர் திட்டப்பணி நிறைவு
பெ.நா.பாளையம் : கவுண்டம்பாளையம்– வடவள்ளி கூட்டு குடிநீர் திட்டத்தை அமைச்சர் மற்றும் அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.கவுண்டம்பாளையம் நகராட்சி மற்றும் வடவள்ளி பேரூராட்சியில் நிலவி வந்த குடிநீர் பிரச்னைக்கு தீர்வு காண கவுண்டம்பாளையம்– வடவள்ளி கூட்டு குடிநீர் திட்டம் 31 கோடியே 80 லட்ச ரூபாய் செலவில் நிறைவேற்றப்பட்டது.
இத்திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்ட குழாய் வழியாக சுத்திகரிக்கப்படாத நீர் கவுண்டம்பாளையத்தை அடைந்தது. இங்குள்ள ஒரு லட்சம் லிட்டர் கொள்ளளவு உள்ள தரைமட்டத் தொட்டியில் சேகரிக்கப்படும் நீர், கவுண்டம்பாளையம் நகராட்சிக்குட்பட்ட பகுதியில் உள்ள ஏழு மேல்நிலைத் தொட்டிகளுக்கு செலுத்தப்பட்டு, அங்கிருந்து பகிர்மான குடிநீர் குழாய் வழியாக பொதுமக்களுக்கு வினியோகம் செய்யப்படும். இதற்கான பணிகள் அனைத்தும் முடிந்து விட்டன. வடவள்ளி பேரூராட்சிக்குட்பட்ட பகுதியில் குடிநீர் குழாய் விஸ்தரிப்பு பணிகள் முடிந்து விட்டன. திட்டத்தின் பணிநிறைவு குறித்து அமைச்சர் பழனிச்சாமி, கவுண்டம்பாளையம்– வடவள்ளி கூட்டு குடிநீர் திட்ட அதிகாரிகள் கவுண்டம்பாளையத்தில் ஆய்வு மேற்கொண்டனர். இக்குழுவினர் காரமடை, வெள்ளியங்காடு, செல்லப்பம்பாளையம் பகுதிகளில் திட்டம் நிறைவேற்றப்பட்ட முறை குறித்து ஆய்வு செய்தனர்.
இது குறித்து கவுண்டம்பாளையம் நகராட்சி தலைவர் சுந்தரம் கூறுகையில், “”கவுண்டம்பாளையம் கூட்டு குடிநீர் திட்டப்பணிகள் நிறைவேற்றப்பட்டு விட்டது. அமைச்சர் ஆய்வை தொடர்ந்து தமிழக முதல்வர் மற்றும் துணை முதல்வர் தலைமையில் இத்திட்டம் விரைவில் பொதுமக்களுக்கு அர்ப்பணிக்கப்படும்,” என்றார்.நிகழ்ச்சியில், கவுண்டம்பாளையம் நகராட்சி செயல் அலுவலர் தனசேகரன், கவுன்சிலர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.