தினமலர் 04.06.2010
சென்ட்ரல் மார்க்கெட் இடமாற்றத்திற்கு பிறகுஅடுத்து என்ன அடுக்குமாடி “பார்க்கிங்‘ விரைவில் வருமா
மதுரை:மாட்டுத்தாவணி காய்கறி மார்க்கெட் நாளை திறக்கப்படுகிறது. பழைய சென்ட்ரல் மார்க்கெட் இடமாறிய பிறகு, அந்த இடத்தில் அடுக்குமாடி பார்க்கிங் வசதியை ஏற்படுத்த மாநகராட்சி விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.நீண்ட போராட்டத்திற்குப் பிறகு தற்போதுள்ள சென்ட்ரல் மார்க்கெட், மாட்டுத்தாவணிக்கு மாற்றப்படுகிறது. இதற்கான திறப்பு நாளை நடக்கிறது.
புதிய மார்க்கெட் திறக்கப் பட்டாலும், பழைய மார்க்கெட்டில் இருந்து அனைத்து கடைகளும் இடம் மாற, இந்த மாதத்தின் இறுதியாகி விடும் என கூறப்படுகிறது. ஏற்கனவே பழைய மார்க்கெட்டில் கடை வைத்திருந்தவர்களுக்கு புதிய இடத்தில் முன்னுரிமை அடிப்படையில் கடைகள் ஒதுக்கப்படுகின்றன. அதற்கு முன் அவர்கள், புதிய இடத்திற்கான டெபாசிட்டை செலுத்த வேண்டும். நேற்று வரை பாதிப்பேர் டெபாசிட் செலுத்தி உள்ளனர்.மற்றவர்களும், இந்த மாத இறுதிக்குள் செலுத்துவர் என எதிர்பார்க்கப்படுகிறது.
குலுக்கல் இல்லை: புதிய மார்க்கெட்டில் யாருக்கு எந்த இடத்தை ஒதுக்குவது என்பதில் குழப்பம் ஏற்பட்டது. ஒவ்வொரு காய்கறி சங்கத்தினரும் ஒரு இடத்தை கேட்டதால், குலுக்கல் முறையில் கடைகளை ஒதுக்கலாம் என மாநகராட்சி முடிவு செய்தது. இதற்கு வியாபாரிகள் எதிர்ப்பு தெரிவித்தனர்.பலர் டெபாசிட் செலுத்தாத நிலையில் குலுக்கல் நடத்தினால் குழப்பம் வரும் என வியாபாரிகள் தரப்பில் கூறப்பட்டது. இதையடுத்து, குலுக்கல்முறையில் கடைகளை ஒதுக்கும் திட்டம்இப்போதைக்கு கைவிடப் பட்டுள்ளது.
அடுக்குமாடி “பார்க்கிங்‘: சென்ட்ரல் மார்க்கெட் இடம் மாறிய பிறகு, அந்த இடத்தில் அடுக்குமாடி “பார்க்கிங்‘ வசதி ஏற்படுத்தும் திட்டம் பல ஆண்டுகளாக பரிசீலனையில் உள்ளது. பாரம்பரிய சின்னங்களை அழகுபடுத்தும் மத்திய சுற்றுலா துறையின் திட்டத்தின் கீழ், மீனாட்சி அம்மன் கோயில் அருகே உள்ள இந்த இடத்தில் அடுக்கு மாடி “பார்க்கிங்‘ கட்டுவதற்கு, கொள்கை அளவில் மத்திய அரசு ஒப்புதல் அளித்து உள்ளது.
இத்திட்டத்தை முழு அளவில் செயல்படுத்த மாநகராட்சி உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால் சென்ட்ரல் மார்க்கெட் இடத்தில் மீண்டும் ஆக்கிரமிப்புகள் தோன்றும் அபாயம் உள்ளது. மீனாட்சி அம்மன் கோயிலுக்கு வரும் வாகனங்களை நிறுத் தற்போது சரியான இட வசதி இல்லை. அடுக்கு மாடி “பார்க்கிங்‘ வசதி ஏற்படுத்தப்பட்டால், இப்பிரச்னையும் தீரும்.