தினமணி 08.06.2010
பாதாளச் சாக்கடைத் திட்டம்: 2-வது தொகுப்பு பணிகள் துவக்கம்
கோவை, ஜூன் 7: கோவை மாநகராட்சியின் விடுபட்ட பகுதிகளுக்கான பாதாளச் சாக்கடைத் திட்டத்தின் 2-வது தொகுப்பு பணிகள் திங்கள்கிழமை துவங்கப்பட்டன.
மாநகராட்சியில் உள்ள 72 வார்டுகளில் தற்போது 23 வார்டுகளில் மட்டுமே பாதாளச் சாக்கடை வசதி உள்ளது. விடுபட்ட பகுதிகளுக்கு ஜவஹர்லால் நேரு நகர்ப்புறப் புனரமைப்புத் திட்டத்தில் ரூ. 377 கோடியில் இவ்வசதி கொண்டு வரப்படுகிறது. இத் திட்டம் 6 தொகுப்புகளாகப் பிரிக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்படுகிறது.
இதில் ரத்தினபுரி, காந்திபுரம், ராமநாதபுரம், நஞ்சுண்டாபுரம் பகுதிகளுக்கான 2-வது தொகுப்பு பணிகள் திங்கள்கிழமை துவங்கப்பட்டன. மேற்குறிப்பிட்ட பகுதிகளில் கழிவுநீரைச் சேகரித்து, நஞ்சுண்டாபுரம் கழிவுநீர் சுத்திகரிப்பு மையத்துக்கு கொண்டுவரும் வகையில் ரூ.56 கோடியில் 2-ம் தொகுப்பு பணி திட்டமிடப்பட்டுள்ளது.
இப் பணியை ஊரகத் தொழில் துறை அமைச்சர் பொங்கலூர் நா.பழனிசாமி துவக்கி வைத்தார். ராமநாதபுரம், ராமலிங்க ஜோதி நகரில் இதற்கான நிகழ்ச்சி நடைபெற்றது.
அமைச்சர் பழனிசாமி பேசுகையில், “உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு நடைபெறுவதை ஒட்டி கோவைக்கு பல்வேறு திட்டங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன. புதிய திட்டச் சாலைகள் உருவாக்கப்பட்டு வருகின்றன. பாதாளச் சாக்கடைத் திட்டத்துக்கு மக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்‘ என்றார்.
மேயர் ஆர்.வெங்கடாசலம், ஆணையர் அன்சுல் மிஸ்ரா, துணை மேயர் நா.கார்த்திக், மண்டலத் தலைவர் எஸ்.எம்.சாமி, ப.பைந்தமிழ், எதிர்க்கட்சித் தலைவர் வெ.ந.உதயகுமார், சுகாதாரக் குழுத் தலைவர் பி.நாச்சிமுத்து, நகரமைப்புக் குழுத் தலைவர் கிருஷ்ணமூர்த்தி, நிதிக்குழுத் தலைவர் நந்தகுமார், மாநகராட்சி உறுப்பினர்கள் சாவித்ரி, மீனா லோகநாதன், ஹேமலதா மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர்.