தினகரன் 10.06.2010
திட்ட பணிகள் தேக்கம் ஆணையர் மீது நடவடிக்கை பெரம்பலூர் நகராட்சி கூட்டத்தில் தீர்மானம்
பெரம்பலூர், ஜூன் 10: பெரம்பலூர் நகராட்சியில் திட்ட பணிகள் தேக்கமடைந்து வருகிறது. இதனால் ஆணை யர் மீது நடவடிக்கை எடுக்க நகராட்சி கூட்டத்தில் தீர்மா னம் நிறைவேற்றப்பட்டது.
பெரம்பலூர் நகராட்சி அவசர கூட்டம் தலைவர் இளையராஜா தலைமையில் நேற்று நடந்தது. துணைத்தலைவர் முகுந்தன், நகராட்சி ஆணையர்(பொ) மணிமாறன் முன்னிலை வகித்தனர்.
காவிரி குடிநீர் இணைப்பு, பாதாள சாக்கடை திட்ட இணைப்பை நகரா ட்சி நிர்வாகம் நடைமுறை படுத்தாதது. பிறப்பு, இறப்பு சான்றிதழ் வழங்குவதற்கு காலதாமதம் ஏற்படுத்துவது. டம்பர் பிளேசர் வாகனம் வாங்கப்பட்டும் டிரைவர் நியமிக்கப்படாததால் தெருக்களில் குப்பைகள் அல்லாமல் தேங்கி கிடப்பது. நகராட்சியில் கணக்கு தணிக்கை முடிக்காததால் புதிய வளர்ச்சி திட்டப்பணிக்கு கடன் வாங்க, புதிய திட்ட வரையறை அனுப்ப வழியின்றி இருப்பது.
பெரம்பலூர் நகராட்சி பாதாள சாக்கடை திட்ட பயனாளிகளிடம் பங்குத்தொகையாக போதிய நிதி சேகரிக்க நடவடிக்கை எடுக்காதது. காமராஜர் வளைவு பகுதியில் சாலையை விரிவுப்படுத்த உத்தரவிட்டு ஒரு ஆண்டாகியும் நடவடிக்கை எடுக்காமல் இருப்பது.
புதிதாக வீட்டுவரி, சொத்துவரி பெயர் மாற்றத்துக்கு மனு கொடுத்தவர்களை 2 மாதமாக அலைகழிப்பதால் மக்கள் மத்தியில் அரசுக்கு கெட்ட பெயர், அதிருப்தி ஏற்படுகிறது. இதனால் ஆணையர் மீது விசாரணை நடத்த இந்த விவரங்களை தமிழக முதல்வர், துணை முதல்வர், மத்திய அமைச்சர்கள் ராசா, நெப்போலியன், நகராட்சி அதிகாரிகள் நிரஞ்சன் மார்டி, செந்தில்குமார், எம்எல்ஏக்கள், நகராட்சிகள் மண்டல இயக்குநர், கலெக்டர் ஆகியோரின் பார்வைக்கு கொண்டு செல்வதென தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. திமுக, காங்கிரஸ் கவுன்சிலர்கள் தீர்மானங்களை ஆதரித்து கையெழுத்திட்டனர்.
அதிமுக வெளிநடப்பு
ஆணையர் மீது ஏற்பட்ட காழ்ப்புணர்ச்சியால் தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவிப்பதாக அதிமுக கவுன்சிலர்கள் ராமச்சந்திரன், ராஜேந்திரன் வெளிநடப்பு செய்தனர். இதுதொடர்பாக அவர்கள் நிருபர்களிடம் கூறியதாவது: நகராட்சி ஆணையர் மீது கொண்ட காழ்ப்புணர்ச்சியால் அவசர கூட்டம் நடத்தப்படுகிறது. திட்டமிட்டு நடத்தப்படும் கூட்டம் என்பதால் அதிமுக கவுன்சிலர்கள் புறக்கணிக்கிறோம் என்றனர். இந்திய கம்யூனிஸ்ட் கவுன்சிலர் பொற்கொடி ஞானசேகரன், தேமுதிக கவுன்சிலர் பேபிகாமராஜ், சுயேச்சை கவுன்சிலரான ரமேஷ் பாண்டியன் கூட்டத்துக்கு வரவில்லை.