தினமலர் 11.06.2010
கூடலூரில் ரூ. 25 லட்சம் செலவில் செம்மொழி மாநாட்டுப் பூங்கா
பெ.நா.பாளையம் : பெரியநாயக்கன்பாளையம் அருகே கூடலூர் பேரூராட்சியில் 25 லட்ச ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டுப் பூங்கா திறப்பு விழாவுக்கு தயாராக உள்ளது.கூடலூர் பேரூராட்சி, கடந்த மார்ச் மாதம் 18 கோடி ரூபாய் மதிப்பு “ரிசர்வ் சைட்‘ களை மீட்டு, இடத்தை சுற்றி கம்பி வேலி அமைக்கும் பணியில் ஈடுபட்டது. ஒவ்வொரு லே– அவுட்டின் மொத்த பரப்பில் 10 சதவீதத்தை பொது மக்களின் பயன்பாட்டுக்காக ரிசர்வ் சைட்டாக ஒதுக்க வேண்டும். பல இடங்களில் ரிசர்வ் சைட் இருப்பதற்கான சுவடே இல்லை. இதனால், கூடலூர் பேரூராட்சியில் உள்ள ரிசர்வ் சைட்களை கண்டறிந்து, ணக்கிடும் பணியை பேரூராட்சி நிர்வாகம் துவக்கியது.இதில் ஒன்பதாவது வார்டு சுப்பையா நகரில் 30 சென்ட், இரண்டாவது வார்டு ஸ்ரீகணேஷ் நகரில் 27 சென்ட், ஏழாவது வார்டு நேரு நகரில் 40 சென்ட், எட்டாவது வார்டு சிந்து நகரில் 20 சென்ட், ஏழாவது வார்டு வனிதா நகர் தெற்கில் 18 சென்ட், வடக்கில் 17 சென்ட் ஆகிய இடங்களில் கம்பி வேலை அமைக்கப்பட்டது.
இதே போல பிரிக்கால் நகர், வெங்கடாசலபதி நகர், ஜெயவர்த்தனவேலு நகர், லட்சுமி கார்டன், தேவையம்பாளையம், வஞ்சிமா நகர், பேராசிரியர் காலனி, மாணிக்கவாசக நகர், கே.ஆர்.நகர், சந்திரமணி நகர், விவேகானந்தா நகர், புவனேஸ்வரி நகர், ரங்கநாயகி நகர், பி.என்டி காலனி உள்ளிட்ட 27 இடங்களில் உள்ள 952 சென்ட் 84 சதுர அடி ரிசர்வ் சைட்களில் கம்பி வேலி அமைக்கும் பணி நடந்துள்ளது. இதில், வஞ்சிமா நகரில் மீட்கப்பட்ட 67 சென்ட் ரிசர்வ் சைட்டில் உலகத்தமிழ் செம்மொழி மாநாட்டுப் பூங்கா அமைக்கும் பணி கடந்த சில நாட்களாக நடந்தது. தற்போது, பணிகள் முடியும் தருவாயில் உள்ளன.
இது குறித்து கூடலூர் பேரூராட்சி செயல் அலுவலர் கல்யாண சுந்திரம், தலைவர் ரங்கசாமி கூறியதாவது:உலகத்தமிழ் செம்மொழி மாநாட்டுப் பூங்கா 25 லட்ச ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ளது. பரபரப்பான உலகில் மனதுக்கும், உடலுக்கும் அமைதி தரும் இடமாக இப்பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. செயற்கை நீருற்று, தமிழர்களின் பண்பாட்டை விளக்கும் சிலைகள், வெளிநாட்டினர் போன்ற சிலைகளுடன் போட்டோ எடுத்துக் கொள்ளும் வசதி, பூங்காவுக்குள் அமைக்கப்பட்டுள்ள சிறுவர் பூங்காவை சுற்றி அமைக்கப்பட்டுள்ள நடைபாதையில் நடைபயிற்சி மேற்கொள்ள வசதி, காடுகளின் முக்கியத்துவத்தை பொதுமக்கள் அறிந்து கொள்ள காட்டுக்குள் விலங்குகள் நடமாடுவதைப் போல சூழ்நிலைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
திறப்பு விழாவுக்கு பின், பொதுமக்கள் பூங்காவை இலவசமாக பயன்படுத்திக் கொள்ளலாம். பூங்காவுக்குள் வரும் குழந்தைகளை கவர விளையாட்டு சாதனங்கள் உள்ளன. அவர்களை மகிழ்ச்சியில் ஈடுபடுத்த கோமாளி போல வேடமணிந்தவர்கள் பூங்காவுக்குள் நடமாடுவர். பூங்காவுக்கு சிறப்பு சேர்க்க பூங்கா நடுவே உலகத் தமிழ் செம்மொழி மாநாடு நினைவை போற்ற நான்கு அடி உயரத்தில் திருவள்ளுவர் சிலை அமைக்கப்பட்டுள்ளது. பொதுமக்களின் பயன்பாட்டுக்காக விரைவில் திறக்கப்படும்.இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.