தினமலர் 11.06.2010
கலப்படம் செய்து விற்ற 120 லிட்டர் பால் பறிமுதல்
ராசிபுரம்: ராசிபுரம் நகராட்சியில் விற்பனை செய்யப்பட்ட 120 லிட்டர் கலப்பட பால் பறிமுதல் செய்து அழிக்கப்பட்டது.ராசிபுரம் நகராட்சி சுகாதார அலுவலர் ராம்குமார் தலைமையில், ஆய்வாளர்கள் லோகநாதன், பாஸ்கரன், பிரகாஷ் ஆகியோர் நகராட்சி பகுதியில் உரிமம் பெறமால் பால் விற்பனை செய்வோர் குறித்து ஆய்வு செய்தனர். ஒன்பது பால் வியாபாரிகளிடம் நடத்திய ஆய்வில், 120 லிட்டர் பாலில் தண்ணீர் கலப்படம் செய்தது கண்டுபிடிக்கப்பட்டு, அந்த பால் பறிமுதல் செய்து அழிக்கப்பட்டது. “நகராட்சியில் உரிய உரிமம் பெறாமல் பால் வியாபாரம் செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்‘ என, நகராட்சி கமிஷனர் தனலட்சுமி எச்சரித்துள்ளார்.