தினகரன் 11.06.2010
பெரிய நிறுவனங்களாக இருந்தாலும் தமிழில் இல்லாத பெயர்பலகை 21ம் தேதி முதல் அகற்றப்படும் மேயர் எச்சரிக்கை
சென்னை, ஜூன் 11: சென்னையில் உள்ள அனைத்து வணிகர் சங்கங்களைச் சேர்ந்த நிர்வாகிகளுடன் மேயர் மா.சுப்பிரமணியன் நேற்று ரிப்பன் மாளிகையில் ஆலோசனை நடத்தினார்.
அப்போது அவர் கூறியதாவது:
தமிழில் பெயர் பலகை வைக்க 20ம் தேதி வரை அவகாசம் தரப்பட்டுள்ளது. பெரும்பாலான டீக்கடைகளில் ‘தேநீர் விடுதி’ என பெயர் பலகை வைக்கப்பட்டுள்ளதாக தேநீர் விடுதிகள் சங்கத் தலைவர் ஆனந்தன் தெரிவித்தார். கேரளாவைச் சேர்ந்த அவருக்கே இந்த உணர்வு இருக்கும் போது, தமிழகத்தில் உள்ளவர்களுக்கும் அந்த உணர்வு வரவேண்டும்.
தனியார் செல் நிறுவனங்கள் உட்பட எந்த பெரிய நிறுவனங்களாக இருந்தாலும் வரும் 20ம் தேதிக்குள் தமிழில் பெயர் பலகை வைக்க வேண்டும். இதில் பெரிய நிறுவனம், சிறிய கடைகள் என பாரபட்சம் கிடையாது. தமிழில் இல்லாத பெயர் பலகைகளை அகற்றும் பணி, 21ம் தேதி காலை 10மணிக்கு அண்ணாசாலையில் எனது தலைமையில் தொடங்கும். இவ்வாறு மேயர் கூறினார்.
ஆணையர் ராஜேஷ்லக்கானி, துணை மேயர் ஆர்.சத்தியபாமா, மன்ற ஆளுங்கட்சித் தலைவர் ராமலிங்கம், எதிர்க்கட்சித் தலைவர் சைதை ரவி, வணிகர் சங்க நிர்வாகிகள் வி.பி.மணி, நவமணி, மயிலை பெரியசாமி, விக்ரம்ராஜா, மோகன் ஆகியோர் பங்கேற்றனர்.