தினமலர் 14.06.2010
நகராட்சி அலுவலகம் கட்டும் பணி விறுவிறு
திருப்பூர் : நல்லூர் நகராட்சிக்காக கட்டப்பட்டு வரும் புதிய அலுவலக பணி இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.
வரும் 2011ல் திருப்பூர் மாநகராட்சியுடன் நல்லூர் நகராட்சி இணைக்கப்பட உள்ளது. அப்போது, நல்லூர் நகராட்சி அலுவலகம் கிழக்கு மண்டல அலுவலகமாக செயல்படும். அதற்கேற்ப, புதிய அலுவலகம் கட்டும் பணி நடந்து வருகிறது. கட்டுமான பணிகள் 60 லட்சம் ரூபாய் மதிப்பில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன; அப்பணி, இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. எலக்ட்ரீசியன் ஒர்க், அறைகளுக்கு டைல்ஸ் ஒட்டுதல், பூச்சு வேலை என 90 சதவீத பணிகள் முடிந்து விட்டன. மதில் சுவர் அமைத்தல், நிலம் சமன் செய்தல் மற்றும் படி களுக்கு டைல்ஸ் ஒட்டும் பணி தீவிரமாக நடக்கிறது. வர்ணம் பூசுதல் உள்ளிட்ட பணிகள், 15 நாட்களுக்குள் முடிந்து விடும். செம்மொழி மாநாடு முடிவதற்குள் கட்டட பணி அனைத்தும் நிறைவு பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நகராட்சி தலைவி விஜயலட்சுமி கூறுகையில், “”செம்மொழி மாநாட்டுக்கு முதல்வர் மற்றும் துணை முதல்வர் உள்ளிட்டோர் கோவை வருவதால், அப்போது அவர்களுக்கு நேரம் கிடைத்தால், திறப்பு விழா செய்வதற்கான வாய்ப்புள்ளது. இம்முடிவு, இன்னும் உறுதி செய்யப்படவில்லை,” என்றார்.