தினகரன் 22.09.2010
பிறப்பு& இறப்பு சான்றிதழ்களை வீடு தேடி வழங்கும் முறையை மாநகராட்சி ஆணையர் ஆய்வு
புரோக்கர்கள் ஓட்டம்
சேலம், செப்.22: சேலம் மாநகராட்சியில் பிறப்பு& இறப்பு சான்றிதழ் வீடு தேடி வழங்கும் முறையை ஆணையர் திடீரென ஆய்வு செய்தார். அப்போது அங்கிருந்த புரோக்கர்கள் ஓட்டம் பிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
சேலம் மாநகராட்சி பகுதியில் வசிப்போருக்கு கால தாமதமின்றி பிறப்பு& இறப்பு சான்றிதழ் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன்படி, தபால் மூலம் வீடு தேடிச்சென்று சான்றிதழ் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், சான்றிதழ்கள் முறையாக அனுப்பப்படுகிறதா? என்பது குறித்து நேற்று மாநகராட்சி ஆணையாளர் பழனிச்சாமி திடீரென ஆய்வு செய்தார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது:
மாநகராட்சி எல்லைக்குள் வசிப்பவர்களுக்கு பிறப்பு& இறப்பு சான்றிதழ்கள் எளிய முறையில் வழங்கும் வகையிலும், பொதுமக்களின் வசதிக்காக சான்றிதழ் கோரி விண்ணப்பித்தால் வீட்டிற்கே தேடி செல்லும் வகையில் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி விண்ணப்பத்துடன் சுய முகவரி எழுதிய ரூ5 ஸ்டாம்ப் ஒட்டிய கவரை விண்ணப்பதாரர் வழங்க வேண்டும். பரிசீலனை முடிவில், சான்றிதழ் தபாலில் அனுப்பி வைக்கப்படும். ஒருவாரத்தில் சான்றிதழ் கிடைக்காவிட்டால், 94874&28080 என்ற செல்போன் எண்ணில் தொடர்பு கொண்டு விவரம் அறியலாம். இதுவரை தபாலில் 175 சான்றிதழ்கள் அனுப்பப்பட்டுள்ளது’’ என்றார்.
ஆய்வின்போது, உதவி ஆணையர் நெப்போலியன், நகர்நல அலுவலர் பொற்கொடி ஆகியோர் உடனிருந்தனர்.
முன்னதாக மாநகராட்சி ஆணையாளர் பழனிச்சாமி, மாநகராட்சி அலுவலகத்திற்கு காரில் வந்தார். அப்போது அங்கு கூடி நின்றவர்களை பார்த்தவுடன் ஆணையாளர் காரில் இருந்து கீழே இறங்கினார். அவரை கண்டதும் அங்கிருந்த புரோக்கர்கள் ஓட்டம் பிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
சேலம் மாநகராட்சியில் ரூ5 ஸ்டாம்ப் ஒட்டிய கவருடன் விண்ணப்பித்தால் தபால் மூலம் வீடு தேடிச்சென்று பிறப்பு& இறப்பு சான்றிதழ் வழங்கும் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இந்த பணியை நேற்று ஆணையர் பழனிச்சாமி திடீரென ஆய்வு செய்தார்.