தினகரன் 22.09.2010
ஆந்திர மாநிலத்தில் மாநகராட்சி&நகராட்சி தலைவர், உறுப்பினர் பதவி காலம் முடிவு அதிகாரிகளிடம் நிர்வாகம் ஒப்படைப்பு
சித்தூர், செப்.22: ஆந்திர மாநில மாநகராட்சி மற்றும் நகராட்சிகளின் தலைவர், உறுப்பினர்களின் பதவி காலம் முடிவதால், அதன் நிர்வாக பொறுப்பை அதிகாரிகள் ஏற்க உள்ளனர்.
ஆந்திர மாநிலத்தில் உள்ள மாநகராட்சி மற்றும் நகராட்சி உள்ளிட்ட உள்ளாட்சி அமைப்புகளை நிர்வகிக்கும் மக்கள் பிரதிநிதிகளின் பதவி காலம் வரும் 28ம் தேதியுடன் முடிவடைகிறது. உள்ளாட்சி தேர்தலுக்கான எந்த ஏற்பாடுகளும் செய்யப்படாத நிலையில், 29ம் தேதி முதல் ஐஏஎஸ் அதிகாரிகள் மற்றும் ஆணையாளர்கள் நிர்வாகங்களை கவனிக்கும் பொறுப்பில் ஈடுபட உள்ளனர்.
அதன்படி சித்தூர் மாவட்டத்தில் உள்ள திருப்பதி மாநகராட்சி, சித்தூர், புத்தூர், நகரி, பலமநேர், புங்கனூர், மதனப்பல்லி, காளஹஸ்தி உள்ளிட்ட 7 நகராட்சிகளில் வரும் 29ம் தேதி முதல் அதிகாரிகள் நிர்வாக பொறுப்பை ஏற்கிறார்கள். .
திருப்பதி மாநகராட்சிக்கு மாவட்ட கலெக்டர் சேஷாத்திரியும், சித்தூர் முதல் நிலை நகராட்சிக்கு மாவட்ட இணை கலெக்டர் பிரத்யும்னாவும் சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட உள்ளதாக தெரிகிறது.
அதை தொடர்ந்து மாவட்டத்தில் உள்ள மதனப்பள்ளி, சித்தூர், திருப்பதி கோட்டாட்சியர்கள், புத்தூர், பலமநேர், மதனப்பள்ளி உள்ளிட்ட நகராட்சிகளுக்கும் சிறப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட உள்ளதாக, கலெக்டர் அலுவலக வட்டாரங்கள் தெரிவித்தன.