Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

சில்வர் பீச்சை சீரமைக்க நடவடிக்கை

Print PDF

தினமணி 30.07.2009

சில்வர் பீச்சை சீரமைக்க நடவடிக்கை

கடலூர், ஜூலை 29: கடலூர் மாவட்டத்தின் சுற்றுலாத் தலங்களில் ஒன்றான சில்வர் பீச் கேட்பாரற்று சீர்குலைந்து காணப்படுகிறது.

பல லட்சம் செலவு செய்து, சிமெண்ட் சாலைகள், உப்பங்கழியில் படகுச் சவாரி, சிறுவர்களுக்கு விளையாட்டுப் பூங்கா, கடலின் அழகைக் கண்டு ரசிக்க கோபுரம், தொண்டு நிறுவனம் அமைத்துக் கொடுத்த பூங்கா என்று பல்வேறு வசதிகள் செய்யப்பட்டு இருந்தன.

ஆனால், சுனாமியில் இவற்றில் பல சேதம் அடைந்தன. பின்னர் மாவட்ட நிர்வாகம் ரூ.10 லட்சத்துக்கு மேல் செலவிட்டு, சில வசதிகளை சரிசெய்து கொடுத்தது. எனினும் கடந்த காலங்களில் பராமரிப்பு இன்மையால், படகுக் குழாம் உள்ளிட்ட பல வசதிகள் சிதைந்துவிட்டன.

சமீப காலமாக உப்பங்கழிகளில் நிறுத்தி வைக்கப்படும் மீன்பிடி படகுகளால், பொதுமக்கள் பல சிரமங்களைச் சந்திக்க வேண்டியது இருக்கிறது. மரத்தால் அமைக்கப்பட்டு இருந்த மேடை சேதம் அடைந்துவிட்டது. இங்கு சுற்றுலாத்துறை மூலம் விடப்பட்ட படகுகள் என்ன ஆயிற்று என்றே தெரியவில்லை. கடற்கரைக்கு வருவோர் பலர், மீன் பிடிப் படகுகளில் கட்டணம் கொடுத்து, உப்பங்கழியில் சவாரி செல்கிறார்கள்.

கடல் சீற்றத்தால் சிமெண்ட் சாலை உடைந்து கிடக்கிறது. பொதுமக்கள் அமர்வதற்கு போடப்பட்ட இருக்கைகள் காணாமல் போயிற்று.

ஆண்டுதோறும் நடைபெறும் சில்வர் பீச் கோடை விழா, மக்களவைத் தேர்தலைக் காரணம் காட்டி இந்த ஆண்டு நடைபெறவில்ல. கோடை விழாவை முன்னிட்டு, சில்வர் பீச்சில் செப்பனிடும் வேலைகள் பலவும் நடைபெறுவது உண்டு.

ஆனால், எல்லாம் சிதைந்து போயினும், கடற்கரைக்கு வரும் வாகனங்களுக்கு நகராட்சி ஒப்பந்ததாரரின் வசூல் வேட்டை தொடர்கிறது. கார்களுக்கு ரூ.10, மோட்டார் சைக்கிள்களுக்கு ரூ.5, சைக்கிள்களுக்கு ரூ.2 வசூலிக்கப்படுகிறது. கடற்கரைக்கு காற்று வாங்க வருவோரிடமும் கட்டணம் வசூலிப்பது, கடலூர் சில்வர் பீச்சில் மட்டுமே.

இந்த நிலையில் சீர்குலைந்து காணப்படும் சில்வர் பீச்சை, கடலூர் மாவட்ட ஆட்சியர் பெ.சீதாராமன், புதன்கிழமை காலை பார்வையிட்டார். சிதைந்து கிடக்கும் படகுக் குழாம் உள்ளிட்டவற்றைச் சீரமைக்க, மதிப்பீடு தயாரிக்குமாறு, நகராட்சி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

மாவட்ட ஆட்சியருடன் கடலூர் நகராட்சித் தலைவர் து.தங்கராசு, ஆணையர் குமார், பொறியாளர் மனோகர் சந்திரன் உள்ளிட்டோர் வந்து இருந்தனர்.