Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சியில் "உணவுபதப்படுத்தும் தொழிற்சாலை துவங்க கடனுதவி'

Print PDF

தினமணி 30.07.2009

மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சியில் "உணவுபதப்படுத்தும் தொழிற்சாலை துவங்க கடனுதவி'

ஈரோடு, ஜூலை 29: மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிப் பகுதிகளிலும் உணவு பதப்படுத்தும் தொழிற்சாலை துவங்குவதற்கு கடனுதவி வழங்கப்படும் என்று மாவட்ட தொழில்மைய பொதுமேலாளர் ஏகாம்பரம் கூறினார்.

ஈரோடு மாவட்ட சிறுதொழில் உரிமையாளர்கள் சங்கம் (எடிசியா) சார்பில் அரிசி சார்ந்த பொருள்கள் தயாரிப்பு தொடர்பான கருத்தரங்கம் ஈரோட்டில் செவ்வாய், புதன்கிழமைகளில் நடைபெற்றது.

தொழிலதிபர் சாந்திதுரைசாமி குத்து விளக்கேற்றி, கருத்தரங்கைத் துவக்கி வைத்தார். எடிசியா தலைவர் மயில்சாமி, செயலர் வெங்கடேஷ், முன்னாள் தலைவர் சுந்தரம், டிஎன்எப்சி தலைவர் தனபாலன் முன்னிலை வகித்தனர்.

ஏகாம்பரம் பேசியது: அரிசி சார்ந்த, மதிப்பூட்டப்பட்ட பொருள்களின் வர்த்தக வாய்ப்பு கூடியுள்ளது. குண்டடம், தாளவாடி, தாராபுரம், அந்தியூர் போன்ற பின்தங்கிய பகுதிகளில், உணவு பதப்படுத்தும் தொழிற்சாலை அமைக்க மானியக் கடனுதவியை அரசு வழங்கியுள்ளது.

மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிப் பகுதிகளில் உணவுபதப்படுத்தும் தொழிற்சாலை அமைக்க மானியக்கடனுதவி வழங்க அரசு அனுமதி மறுத்துள்ளது. இந்த விதிமுறையைத் தளர்த்தி, அப்பகுதிகளிலும் தொழிற்சாலை துவங்க கடனுதவி வழங்க அனுமதிக்குமாறு அரசுக்குப் பரிந்துரை செய்யப்பட்டிருந்தது.

இதையேற்று, கடந்த சில தினங்களுக்குமுன் நடைபெற்ற ஊரக தொழில்துறை மானியக்கோரிக்கையின்போது, அனைத்து ஊராட்சி, நகராட்சிப் பகுதிகளிலும் தொழிற்சாலை துவங்க மானியக்கடனுதவி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இதற்கான அரசாணை விரைவில் கிடைத்து விடும். அதற்குப் பின் உணவு பதப்படுத்தும் தொழிற்சாலைகளுக்கான கடனுதவிகோரி விண்ணப்பிக்கலாம்.

கடந்த ஆண்டில் சிறு தொழிற்சாலைகள் துவங்க ரூ.1.5 கோடி மானியம் வழங்கப்பட்டுள்ளது. மேலும் 20 சத மின்கட்டணச் சலுகைகளும் வழங்கப்பட்டுள்ளன. அரசின் சலுகைகளைப் பயன்படுத்தி, ஏராளமானோர் தொழில்துவங்க முன்வர வேண்டும் என்றார்.

தமிழ்நாடு அரிசி ஆலை உரிமையாளர்கள் மற்றும் நெல்-அரிசி டீலர்கள் சம்மேளன ஆலோசகர் கே.எஸ்.ஜெகதீசன் பேசியது:

அரிசி ஆலை உரிமையாளர்கள், நிறைய தொழில்நுட்பங்களைக் கற்றுக் கொள்ள வேண்டும். அரிசியிலிருந்து ஒயின், அரிசி குருணையை பயன்படுத்தி ரவை, மாவு, நூடுல்ஸ் போன்ற பொருள்களைத் தயாரித்து விற்பனை செய்தால், அதிக லாபம் கிடைக்கும்.

தற்போது ஈரோடு, காங்கேயம் பகுதிகளிலிருந்தும் நல்ல ரக அரிசி கிடைக்கிறது. ஈரோட்டில் நெல், அரிசி ஆராய்ச்சி நிலையம் மற்றும் அரிசி சார்ந்த உபபொருள்களைத் தயாரிக்கும் மையம் அமைக்க அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என்றார்.