Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

மெரீனாவில் பிளாஸ்டிக் தடை அமல்

Print PDF

தினமணி 17.08.2009

மெரீனாவில் பிளாஸ்டிக் தடை அமல்

சென்னை, ஆக. 15: சென்னை மெரீனா கடற்கரையில் பிளாஸ்டிக் பொருள்களைப் பயன்படுத்த மாநகராட்சி விதித்த தடை சனிக்கிழமை அமலுக்கு வந்தது.

இதுகுறித்து மாநகர மேயர் மா. சுப்பிரமணியன், செய்தியாளர்களிடம் கூறியதாவது:

பிளாஸ்டிக் பொருள்களைப் பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள் குறித்து 1,500 வியாபாரிகள், பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், கலந்துரையாடல் மற்றும் விழிப்புணர்வு பிரசாரக் கூட்டம் நடத்தப்பட்டுள்ளது.

அண்ணா நினைவிடம் முதல் கலங்கரை விளக்கம் வரை 100 விளம்பரப் பலகைகளும் நிறுவப்பட்டுள்ளன. மெரீனாவில் தினமும் மெகா ஃபோன் மூலம் பிரசாரம் செய்யப்பட்டு வருகிறது. இப்பிரசாரத்தில் தொண்டு நிறுவனங்களும் பங்கேற்க ஏற்பாடு செய்யப்படும்.

பிளாஸ்டிக் பொருள்களின் பயன்பாட்டால் குழந்தைகளுக்கு மனவளர்ச்சி பாதிப்பு ஏற்படுகிறது. மக்களின் உடல் நலத்துக்கும் பேராபத்து ஏற்படுகிறது.

பிளாஸ்டிக், பாலித்தீன் பைகள் கடற்கரை மணலில் புதைந்து, மழை நீர் நிலத்தின் அடியில் உட்புகாமல் தடுக்கிறது.

எனவே, முதற்கட்டமாக பிளாஸ்டிக் மற்றும் பாலித்தீன் இல்லாத மெரீனா கடற்கரையை உருவாக்கும் வகையில், இப் பொருள்களை பயன்படுத்த மாநகராட்சி தடை விதித்துள்ளது.

அபராதம் விதிக்க நடவடிக்கை:மெரீனாவில் தடையை மீறி பாலித்தீன் உள்ளிட்ட பிளாஸ்டிக் பொருள்களைக் கொட்டுவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

மாநகராட்சிப் பகுதியில் பொது இடங்களில் குப்பை கொட்டினால் ரூ. 50-ம், கட்டட இடிபாடுகளைக் கொட்டினால் ரூ. 500-ம் அபராதமாக செலுத்த வேண்டும் என்ற விதி ஏற்கெனவே உள்ளது.

5 இடங்களில் குடிநீர் வசதி: மெரீனாவில் குடிநீர் பாக்கெட்டுகள், பிளாஸ்டிக் கோப்பைகளில் தேநீர், காபி விற்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

மெரீனா நீச்சல்குளம் மேம்பாடு: மெரீனா கடற்கரையில் குடிநீர் வாரியம் மூலம் 5 இடங்களில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்க ஏற்பாடு செய்யப்படும்.

பெரியமேடு மைலேடீஸ் பூங்காவில் ரூ. 1 கோடியில் நவீன நீச்சல் குளம் அமைக்கப்பட்டு வருகிறது. மெரீனா நீச்சல் குளத்தில் விரைவில் அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்படும்.

சென்னையில் 30-க்கும் மேற்பட்ட இடங்களில் ரூ. 8 கோடியில் பூங்காக்கள் மேம்படுத்தப்பட்டுள்ளன. இந்தப் பூங்காக்களுக்கு பொதுமக்கள் அதிக எண்ணிக்கையில் தினமும் வருகின்றனர். இதனால், பொதுமக்களின் வசதிக்காக பூங்காக்களில் பார்வையாளர்களின் நேரத்தை அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது என்றார் மாநகர மேயர் மா. சுப்பிரமணியன்.

முன்னதாக தேசியக் கொடியை ஏற்றி பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை அவர் வழங்கினார்.

இதில் மாநகராட்சி ஆணையர் ராஜேஷ் லக்கானி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.