Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

மெரீனா கடற்கரையில் பிளாஸ்டிக் பொருட்களுக்கு இன்று முதல் தடை

Print PDF

மாலை மலர் 17.08.2009

மெரீனா கடற்கரையில் பிளாஸ்டிக் பொருட்களுக்கு இன்று முதல் தடை

சென்னை, ஆக. 15-

உலகின் மிக அழகான நீண்ட கடற்கரை என்ற பெருமை சென்னை மெரீனா கடற்கரைக்கு உள்ளது. இந்த கடற்கரை சுமார் 3 கிலோ மீட்டர் நீளம் கொண்டது. வெளிநாடுகளில் இருந்து வரும் சுற்றுலா பயணிகளும், தமிழ்நாட்டின் பிற மாவட்டங்களில் இருந்து வருபவர்களும் மெரீனா கடற்கரைக்கு பொழுது போக்க வரத்தவறுவது இல்லை. எத்தனை தடவை சென்றாலும் சலிப்பே தராத மெரீனா சமீப காலமாக மாசுபட தொடங்கியது. இதையடுத்து மெரீனா கடற்கரையை சுத்தமாக்கி அழகுபடுத்தும் பணியை சென்னை மாநகராட்சி தொடங்கி உள்ளது.

முதல் கட்டமாக கடற்கரை மணல் சுத்தப்படுத்தப்பட்டது. அடுத்து உயரமாக தடுப்பு சுவர்கள் எழுப்பப்பட்டன. பிறகு அழகு தரும் புல்வெளிகள் உருவாக்கப்பட்டன.

அடுத்தக் கட்டமாக மெரீனாவில் குப்பைகள் சேருவதை தடுக்கும் நடவடிக்கைகள் தொடங்கி உள்ளன. மெரீனாவுக்கு வரும் காதலர்கள் மற்றும் நடைபாதை வியாபாரிகள் மூலம் தான் கடற்கரை அதிகமாக அசுத்தமாகிறது.

இதை தடுப்பதற்காக மெரீனா கடற்கரையில் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்த சென்னை மாநகராட்சி தடை விதித்துள்ளது. இந்த அறிவிப்பு இன்று (சனி) முதல் நடைமுறைக்கு வந்துள்ளது.

மெரீனாவுக்கு பிளாஸ்டிக் பொருட்கள் எடுத்து வருபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சென்னை மாநகராட்சி எச்சரித்துள்ளது