Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

நீதிபதி முன்னிலையில் வணிக வளாக கடைகள் குலுக்கல் நடத்தி ஒதுக்கீடு

Print PDF

தினகரன் 14.10.2010

நீதிபதி முன்னிலையில் வணிக வளாக கடைகள் குலுக்கல் நடத்தி ஒதுக்கீடு

சென்னை, அக். 14: பாண்டி பஜார் வணிக வளாகத்தில், நடைபாதை வியாபாரிகளுக்கு நீதிபதி முன்னிலையில் விரைவில் குலுக்கல் நடத்தி, கடைகள் ஒதுக்கப்படும் என்று மேயர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

இதுகுறித்து மேயர் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை:

எழும்பூர் ரயில் நிலையம் எதிரிலும், சென்ட்ரல் ரயில் நிலையம் எதிரிலும், பூங்கா ரயில் நிலையம் அருகிலும் மற்றும் விக்டோரியா பப்ளிக் ஹாலை சுற்றியிருந்த ஆக்கிரமிப்பு கடைகள் மற்றும் நடைபாதை கடைகள் அகற்றப்பட்டு, அவர்களுக்கு மாற்று ஏற்பாடாக அல்லிக்குளம் வளாகத்தில் கடைகள் ஒதுக்கப்பட்டன.

அதன் தொடர்ச்சியாக தியாகராயநகரில் உள்ள தியாகராய சாலை, உஸ்மான் சாலை, சிவப்பிரகாசம் சாலை ஆகிய சாலைகளில் உள்ள நடைபாதை வியாபாரிகளுக்கு பாண்டிபஜாரிலும், அயனாவரம் பாலவாயல் மார்க்கெட் சுற்றியுள்ளவர்களுக்கு அதன் அருகாமையிலும், ராயபுரம் மணியக்கார சத்திரத்தெருவில் நடைபாதை வியாபாரிகளுக்கு அந்தப் பகுதியிலும் ஹாக்கின்ஸ் கமிட்டி தலைவர் நீதிபதி ராமமூர்த்தியின் ஆணைப்படி வணிக வளாகங்கள் கட்டப்பட்டது.

இந்த வணிக வளாகங்களை துணை முதல்வர் மு..ஸ்டாலின் கடந்த மாதம் 13ம் தேதி தி.நகரில் நடந்த நிகழ்ச்சியில் திறந்து வைத்தார்.

ராயபுரம் மணியக்கார சத்திரத்தெருவில் 117 பேர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டதில் சில புகார்கள் வந்ததன. அதன் அடிப்படையில், மாநகராட்சி விழிப்புப்பணி அதிகாரி மூலம் வியாபாரிகள் சங்க நிர்வாகிகளுடன் நேரடியாக ஆய்வு செய்யப்பட்டது. அதில் 101 பேர் மட்டுமே உண்மையான பயனாளிகள் என தெரியந்தது. அதில் 16 பேர் கடைகளே இல்லாதவர்கள் என கண்டறியப்பட்டுள்ளது.

அதே போன்று, பாண்டிபஜாரில் உள்ள மாநகராட்சி வணிக வளாகம் மற்றும் அயனாவரம் பாலவாயல் சாலையில் உள்ள மாநகராட்சி வணிக வளாகங்களின் உண்மையான பயனாளிகள் விழிப்புப்பணி அதிகாரி மூலம் அந்தந்த பகுதி வியாபாரிகள் சங்க நிர்வாகிகளுடன் ஆய்வு செய்து, பட்டியல் தேர்வு செய்து, ஹாக்கின்ஸ் கமிட்டி நீதிபதி ராமமூர்த்தியிடம் சமர்ப்பிக்கப்படும். அவர் முன்னிலையிலேயே பயனாளிகளுக்கு குலுக்கல் முறையில் கடைகள் ஒதுக்கீடு செய்யப்படும். மீதமுள்ள கடைகள் நீதிபதி அனுமதி பெற்று, திறந்தவெளி ஒப்பந்தங்கள் கோரப்பட்டு, கடைகள் ஒதுக்கீடு செய்யப்படும்.

மாநகராட்சி கட்டியுள்ள வணிக வளாகங்களில் உண்மையான பயனாளிகளுக்கு கடைகள் கிடைக்க உறுதி செய்யப்படும். இதன் மூலம் அந்தப்பகுதிகளில் உள்ள சாலைகளில் பொதுமக்கள் எந்தவித சிரமுமின்றி செல்வதற்கு மாநகராட்சி வழிவகுக்கும். இவ்வாறு அறிக்கையில் மேயர் கூறியுள்ளார்.