Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

கோவை நகரில் நெரிசலுக்கு யார் பொறுப்பு? விதிமீறலால் மக்கள் பாதிப்பு

Print PDF

தினமலர் 14.10.2010

கோவை நகரில் நெரிசலுக்கு யார் பொறுப்பு? விதிமீறலால் மக்கள் பாதிப்பு

கோவை : கட்டட விதிமுறையை பின்பற்றி, வணிக கட்டடங்கள் வாகனங்கள் நிறுத்த இடம் ஒதுக்காததால், நகரில் உள்ள வீதிகளில் நெரிசல் ஏற்படுகிறது. விழாக் காலங்களில் கூட்டம் அதிகரித்திருப்பதால், வாகனம் நிறுத்த பொதுமக்கள் சிரமத் துக்குள்ளாகி வருகின்றனர்.

கோவையில், தீபாவளி பண்டிகை நெருங்கி வருகிறது. கோவையிலுள்ள கடை வீதிகளில் மக்கள் நடமாட்டம், வாகன போக்குவரத்து அதிகரித்துள்ளது. குறிப்பாக, ஒப்பணக்கார வீதி, ராஜவீதி, கிராஸ்கட் ரோடு உள்ளிட்ட பல பகுதிகளிலும் உள்ள ஜவுளிக்கடைகளிலும், நகைக்கடைகளிலும் கூட்டம் அலை மோதுகிறது. அதேபோல, டிபார்ட்மென்டல் ஸ்டோர்களிலும் கூட்டத்துக்குக் குறைவே இல்லை.ஆனால், இந்த வணிக நிறுவனங்களில் பெரும்பாலானவை கட்டடங்களில் முறையான வாகனம் நிறுத்த வசதி, தீத்தடுப்பு வசதிகளை அளிக்கவில்லை. வணிக நிறுவனங்களின் கட்டடத்துக்கான அனுமதியை ஆய்வு செய்தால், ஒவ்வொரு கட்டடத்திலும் "பார்க்கிங்' இடம் ஒதுக்கப்பட்டிருப்பதைப் பார்க்க முடியும். இந்த இடம் எதுவுமே இப்போது வாகனங்கள் நிறுத்துமிடமாக இல்லை; எல்லாமே வியாபாரப் பகுதிகளாக மாற்றப்பட்டுள்ளன.

சில ஆண்டுகளுக்கு முன் கட்டடப்பட்ட கட்டடங்களிலிருந்து, மிகச் சமீபமாக திறக்கப்பட்டுள்ள வணிக நிறுவனங்கள் வரையிலும் அத்துமீறல்கள் நடந்துள்ளது. ஒரு சில நிறுவனங்கள், கட்டடத்துக்கு சம்மந்தமில்லாத இடத்தை "பார்க்கிங்' இடமாக வைத்துள்ளன. அவற்றில், கார் நிறுத்த மட்டுமே அனுமதிக்கின்றனர்.

புரூக்பாண்ட் ரோட்டில் உருவாகியுள்ள வணிக வளாகத்தில் உள்ள கடைகளுக்கு வரும் வாடிக்கையாளர்களுக்கு வாகனங்கள் நிறுத்த வசதி செய்யப்பட்டுள்ளது; அங்கு நிறுத்த கட்டணம் வசூலிக்கப்படுகிறது. கிராஸ்கட் ரோட்டிலுள்ள ஜவுளிக்கடை ஒன்றில், கார்களை நிறுத்த "டிபாசிட்' வாங்கப்பட்டாலும் "பில்' காண்பித்தால் மட்டுமே தொகையை திருப்பித்தருகின்றனர்.

வணிக நிறுவனங்கள் அனைத்துமே, கார்களில் வரும் வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே இடம் ஒதுக்குகின்றன. டூ வீலர் வைத்திருப்போருக்கு பெரும் சிரமம் ஏற்படுகிறது. கடைகளின் முன் அவற்றை நிறுத்தவும் தடை விதிக்கின்றனர். எனவே, "நோ பார்க்கிங்' இடத்தில் டூ வீலர்களை நிறுத்த வேண்டிய கட்டாயத்தில் மக்கள் உள் ளனர்.

கட்டட விதிமீறல்கள், "பார்க்கிங்' பிரச்னை பற்றி, யாரும் கண்டுகொள்ளாததால் பொதுமக்களும், போலீ சும் சிரமத்துக்குள்ளாகியுள்ளனர். பொது இடங்களில் வாகனம் நிறுத்த, மாநகராட்சி பொது நிதியில் "மல்டி லெவல் பார்க்கிங்' அமைக்க முயற்சி மேற்கொள்ள வேண்டும். கட்டட அனுமதி பெற வணிக நிறுவனங்கள் வரைபடத்தில் குறிப்பிட்ட "பார்க்கிங்' பகுதிகளை ஆய்வு செய்து, பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும். விதிமீறல்கள்,அத்துமீறல்களால் பாதிக்கப்படுவது பொதுமக்களே. மக்களுக்கு ஆதரவாக நடவடிக்கை எடுக்க வேண்டிய அனைத்து அரசுத்துறைகளும், வியாபார நிறுவனங் களுக்கு ஆதரவாகச் செயல் படுவதால், எதிர்காலத்தில் பல விபரீதங்கள் ஏற்பட வாய்ப்பு அதிகரித்துள்ளது. வாகனங்கள் நிறுத்த இடம் ஒதுக்காததைப் போல, இந்த கட்டடங்கள் பலவற்றில் தீத்தடுப்பு வசதிகளும் இல்லை. தீபாவளி நாட்களில் மக்கள் கூட்டம் இருக்கும்போது,சிறு அசம் பாவிதம் நிகழ்ந்தாலும் பெரிய அளவில் சேதம் ஏற்படும். சட்டத்தை அமல் படுத்த அரசுத்துறை அதிகாரிகள் களமிறங்க வேண்டும். இல்லாவிட்டால், எதிர்காலத்தில் ஏற்படும் பாதிப்புகளுக்கும் பொறுப்பேற்க வேண்டும்.

நடவடிக்கை எடுக்காதது ஏன்? : "பார்க்கிங்' ஒதுக்காத பெரிய வணிக நிறுவனங்களின் மீது, அரசுத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காமல் இருக்க மாமூல், அன்பளிப்பு, லஞ்சம், அச்சம், எதிர்பார்ப்பு என பல காரணங்கள் இருக்கின்றன. "இந்த நிறுவனங்களின் மீது எந்த அரசுத்துறையும் நடவடிக்கை எடுக்கும்' என, பொது மக்கள் எதிர்பார்ப்பது ஏமாற்றத்தையே தரும். இத்தகைய நிறுவனங்களை பொதுமக்களே புறக்கணிப்பதுதான் சரியான தீர்வு.