Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

ரூ2.6 லட்சத்தில் கட்டப்பட்ட கழிப்பிடம் பயன்பாட்டுக்கு வருமா? எஸ்.வெங்கடாசலம்

Print PDF

தினமணி    14.10.2010

ரூ2.6 லட்சத்தில் கட்டப்பட்ட கழிப்பிடம் பயன்பாட்டுக்கு வருமா? எஸ்.வெங்கடாசலம்

போடி, அக். 13:÷போடி அருகே மேலச்சொக்கநாதபுரம் பேரூராட்சிப் பகுதியில் ரூ 2.6 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட நவீன பெண்கள் கழிப்பிடம் பயன்பாட்டுக்கு வராமல் வீணாகக்கிடக்கிறது.

÷போடி அருகே உள்ள மேலச்சொக்கநாதபுரம் கிராமத்தில் சுகாதார வசதியோ, கழிப்பிட வசதியோ இல்லை. குப்பைகள் தேங்கி நோய் பரவும் நிலை உள்ளது. நவீன கழிப்பிட வசதிகள் இல்லாததால் பொதுமக்கள் ஊருக்கு ஒதுக்குப்புறமான பகுதிகளை திறந்தவெளிக் கழிப்பிடமாக பயன்படுத்தி வருகின்றனர்.

÷பொதுமக்களின் கோரிக்கையை தொடர்ந்து இக்கிராமத்தில் உள்ள 6-வது வார்டில் தர்மத்துப்பட்டி ஓடை பகுதியில் 2001-2002-ம் ஆண்டு பெண்களுக்கான நவீன கழிப்பிடம் கட்டப்பட்டது. ரூ 2.60 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட இக்கழிப்பிடத்துக்கு மின்சார வசதி, தண்ணீர் வசதி போன்றவை ஏற்படுத்தப்பட்டுள்ளன.

÷ஆனால் கழிப்பிடத்துக்குச் செல்வதற்கு முறையான பாதை வசதி செய்து தரப்படவில்லை. கழிப்பிடத்துக்குச் செல்லும் வழியில் உள்ள நத்தம் புறம்போக்கு பகுதியைச் சிலர் ஆக்கிரமித்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் ஓடையில் நடந்து சென்று கழிப்பிடத்தை பயன்படுத்தி வந்தனர்.

÷இந்நிலையில் மழைக் காலங்களில் ஓடையில் தண்ணீர் வரத்து இருப்பதாலும், முள் செடிகள் வளர்ந்து புதர் போல் காணப்படுவதாலும் பெண்கள் செல்ல முடியாத சூழ்நிலை நிலவுகிறது.

÷கழிப்பிடத்துக்கு பாதை வசதி செய்து தரக் கோரி பேரூராட்சி நிர்வாகத்திடம் பலமுறை முறையிட்டும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. கடந்த 8 ஆண்டுகளாக இக்கழிப்பிடம் பயன்படுத்தப்படாமல் பூட்டிய நிலையில் உள்ளது.

÷பல ஆண்டுகளாக கழிப்பிடம் பயன்படுத்தப்படாமலும், பராமரிப்பின்றியும் இருப்பதால் அக்கட்டடம் சிதிலமடையும் நிலையில் உள்ளது. இது குறித்து மேலச்சொக்கநாதபுரம் பேரூராட்சி அலுவலகத்தில் தொடர்பு கொள்ளச் சென்றபோது, நிர்வாக அலுவலர் வெளியில் சென்றுவிட்டதாகவும், அவர்தான் விபரம் கூற வேண்டும் எனவும் தொடர்ந்து கூறப்பட்டது.

பேரூராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுத்து இக்கழிப்பிடத்துக்கு பாதை வசதி ஏற்படுத்தவும், முறையாகப் பராமரிக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.