Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

தொடர்ந்து ஏழாவது தடவையாக கல்யாண் மாநகராட்சி தேர்தலை 3 கிராம மக்கள் புறக்கணிப்பு

Print PDF

தினகரன் 15.10.2010

தொடர்ந்து ஏழாவது தடவையாக கல்யாண் மாநகராட்சி தேர்தலை 3 கிராம மக்கள் புறக்கணிப்பு

மும்பை, அக்.15: கல்யாண்&டோம்பிவலி மாநகராட்சிக்கு வரும் 31ம் தேதி தேர்தல் நடைபெற உள்ள நிலையில், இந்த மாநகராட்சிக்கு உட்பட்ட 3 கிராமங்கள் ஏழாவது தடவையாக தேர்தல் புறக்கணிப்பு செய்கின்றன.

ஆதிவாசி மக்கள் வசிக்கும் ஆம்பிவலி, மொஹிலி, பல்யாணி ஆகிய இந்த மூன்று கிராமங்களிலும் சுமார் 3,000 வாக்காளர்கள் உள்ளனர். இந்த கிராமங்கள் கடந்த 28 ஆண்டுகளாக இந்த மாநகராட்சியின் ஒரு பகுதியாக இருந்து வருகின்றன. ஆனால் இவற்றின் வளர்ச்சிக்காக மாநகராட்சி எதுவுமே செய்யவில்லை என்று கிராம மக்கள் கடந்த பத்து ஆண்டு காலமாக போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

அத்துடன் தொடர்ந்து ஏழாவது முறையாக தேர்தலை புறக்கணிக்கவும் முடிவு செய்துள்ளனர். எந்த அரசியல் கட்சிக்கும் ஓட்டு போட வேண்டாம் என்று இந்த கிராம மக்கள் சார்பில் தொடங்கப்பட்டுள்ள சர்வபக்ஷியா கிராம்விகாஸ் சங்கர்ஷ் சமிதிஎன்ற அமைப்பு பிரசாரம் செய்து வருகிறது. கல்யாண்&டோம்பிவலி மாநகராட்சியில் இருந்து இந்த கிராமங்கள் நீக்கப்பட்டு மூன்று தனித்தனி கிராம பஞ்சாயத்துக்கள் உருவாக்கப்பட வேண்டும் என இந்த சமிதி கோரி வருகிறது.

சமிதியின் தலைவர் கணேஷ் மாத்ரே இப்பிரச்னை பற்றி கூறுகையில், "நாங்கள் மாவோயிஸ்டுகள் இல்லை. பொதுமக்களை துப்பாக்கி முனையில் மிரட்டி தேர்தலை புறக்கணிக்கும்படி கூறவும் இல்லை. ஜனநாயக முறையில் பொதுக்கூட்டங்கள் மூலமாகவும் பேரணிகள் மூலமாகவும் எங்கள் கருத்துக்களை மக்களிடம் எடுத்துக் கூறுகிறோம். பத்து ஆண்டுகளாக தேர்தல் புறக்கணிப்பு செய்தும்கூட எங்கள் குறைகளை கேட்க அதிகாரிகள் யாரும் இங்கு வரவில்லை.

கிராம நிலம் அனைத்தும் மாநகராட்சிக்கு சொந்தமானதாக இருக்கிறது. இவற்றை கட்டிடங்கள் கட்ட பயன்படுத்த முடியும் என்பதால் பில்டர்களும் அரசியல்வாதிகளும்தான் பயன் அடைவார்கள். இந்த நிலங்கள் மீது எந்தவொரு முடிவையும் எடுக்கும் முன்பு கிராம மக்களையும் கலந்து ஆலோசிக்க வேண்டும். கடந்த 28 ஆண்டுகளில் இந்த கிராமங்களின் வளர்ச்சிக்காக மாநகராட்சி வெறும் ரூ33.47 லட்சம் மட்டுமே செலவிட்டு இருப்பது மாநகராட்சி ஆவணங்களில் இருந்து தெரிய வந்துள்ளது. மாநகராட்சி எங்களை கவனிக்காத போது நாங்கள் ஏன் அதனுடன் சேர்ந்து இருக்க வேண்டும்? பல முறை தேர்தலை புறக்கணித்தும்கூட எந்த மாற்றமும் ஏற்படவில்லை. எனவே இப்பிரச்னை தொடர்பாக உயர் நீதிமன்றத்தை அணுக இப்போது முடிவு செய்துள்ளோம்Ó என்றார்.

இதற்கிடையே, கிராம மக்களை தங்கள் பக்கம் இழுக்கும் முயற்சியில் பல்வேறு அரசியல் கட்சிகளும் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. ஒரு அரசியல் கட்சியின் வலையில் விழுந்துள்ள பல்யாணி கிராம மக்களின் ஒரு பிரிவினர் இந்த தடவை தேர்தலில் ஓட்டுபோட முடிவு செய்துள்ளனர்.

கல்யாண்&டோம்பிவலி மாநகராட்சி ஏற்கனவே இதுபோன்ற ஒரு சர்ச்சையில் சிக்கி இருக்கிறது. மாநகராட்சியில் இருந்து பிரிந்து செல்ல அனுமதிக்க வேண்டும் என 27 கிராமங்கள் கோரிக்கை விடுத்தன. இதை வலியுறுத்தி இந்த கிராமங்கள் கடந்த 1995ம் ஆண்டில் இருந்து 2002ம் ஆண்டு வரையில் தேர்தல்களை புறக்கணித்தும் வந்தன. இதனை தொடர்ந்து அந்த கிராமங்களின் கோரிக்கையை அரசு ஏற்றது.