Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

தாம்பரம் கடப்பேரி மயானத்தில் எரிவாயு தகன மேடை அமைவது எப்போது?

Print PDF

தினகரன் 19.10.2010

தாம்பரம் கடப்பேரி மயானத்தில் எரிவாயு தகன மேடை அமைவது எப்போது?

தாம்பரம், அக். 19: தாம்பரத்தில் எரிவாயு தகனமேடை அமைக்கும் பணி, ஆண்டுகள் பலவாகியும் முடிக்கப்படாமல் மிகவும் மந்தமாக நடைபெற்று வருகிறது. தாம்பரம் நகராட்சி மயானத்தில் இறந்தவர்களை புதைத்தும், எரித்தும் வருகின்றனர். நகராட்சி பகுதியில் இறந்தவர்களின் உடல்களை மயானத்தில் திறந்தவெளியில் எரிப்பதால் பொதுமக்களுக்கு சுகாதார கேடு ஏற்படுகிறது. சுற்றுச்சூழல் பாதுகாப்பை கருத்தில் கொண்டும், தாம்பரம் நகராட்சியில் பெருகி வரும் மக்கள் தொகையை கருத்தில் கொண்டும் மயானப்பகுதிலேயே நவீன எரிவாயு தகன மேடை அமைக்க முடிவு செய்யப்பட்டது.

நகராட்சியில் கடப்பேரி, சேலையூர், கிழக்கு தாம்பரம், மௌனநகர், கன்னடர்பாளையம், திருநீர்மலை ரோடு போன்ற இடங்களில் மயானங்கள் உள்ளன. அனைத்தும் நகராட்சி சார்பில் பராமரிக்கப்பட்டு வருகிறது. கடப்பேரி மயானத்தில் அதிகளவில் சடலங்கள் எரிக்கப்படுவதால் இங்கு எரிவாயு தகனமேடை அமைக்க முடிவு செய்யப்பட்டது.

இதற்காக ரூ50 லட்சத்தில் மதிப்பீடு தயாரிக்கப்பட்டது. இதில் அரசு மானியமாக ரூ20லட்சம் வழங்கியது. மீதி ரூ30 லட்சம் நகராட்சி பொது நிதியில் இருந்து செலவிட தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தகனமேடைக்கான டெண்டர் விடப்பட்டது. மதுரையை சேர்ந்த ஜூவாலா எக்யூப்மென்ட் அண்டு கன்ஸ்ட்ரக்ஷன் நிறுவனத்துக்கு பணி வழங்கப்பட்டது.

பலமுறை கவுன்சில் கூட்டங்களில் வலியுறுத்தியும், பணியை செய்யாத அந்த நிறுவனத்தின் ஒப்பந்தம் ரத்து செய்யப்படவில்லை. தற்போது கட்டிட வேலைகள் முடியும் நிலையில் இருந்தாலும், தகன மேடை இயந்திரங்கள் நிறுவப்படவில்லை. தினமும் ஆறு, ஏழு சடலங்கள் இங்கு வருகின்றன. கட்டிடம் கட்டப்படுவதால் இடவசதியின்றியும், தண்ணீர் வசதி இல்லாமலும் சடலங்களை தகனம் செய்வதில் சிரமம் ஏற்பட்டு வருகிறது. பணியை விரைந்து முடிக்க நகராட்சி நிர்வாகம் எந்த முயற்சியும் மேற்கொள்ளவில்லை. இதில் உயர் அதிகாரிகள் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.