Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

பெரம்பலூர் நகராட்சியில் காலிப் பணியிடங்கள் நிரப்பப்படுமா?

Print PDF

தினமணி 19.10.2010

பெரம்பலூர் நகராட்சியில் காலிப் பணியிடங்கள் நிரப்பப்படுமா?

பெரம்பலூர், அக். 18: பெரம்பலூர் நகராட்சியில் காலியாகவுள்ள அலுவலர், பணியாளர் பணியிடங்களால், வளர்ச்சித் திட்டப் பணிகளில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. எனவே, காலிப் பணியிடங்களை விரைந்து நிரப்ப வேண்டும் எனப் பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

பேரூராட்சியாக இருந்த பெரம்பலூர், மூன்றாம் நிலை நகராட்சியாக மாற்றப்பட்டு, தற்போது இரண்டாம் நிலை நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது. நகராட்சிக்கு உள்பட்ட பெரம்பலூர், அரணாரை, துறைமங்கலம் உள்பட 21 வார்டு பகுதிகளில், சுமார் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர்.

இந்த நகராட்சியில் ரூ.23.38 கோடியில் புதை சாக்கடைத் திட்டம், ரூ.6.5 கோடியில் ஜவாஹர்லால் நேரு ஒருங்கிணைந்த குடியிருப்பு மற்றும் குடிசை மேம்பாட்டுத் திட்டம், ரூ.1.88 கோடியில் நகர்ப்புற சாலை மற்றும் உள்கட்டமைப்பு திட்டம், ரூ.3 கோடியில் சிறப்பு சாலை திட்டம், பொது நிதியிம் ரூ.1 கோடியில் பல்வேறு அடிப்படை வளர்ச்சி திட்டப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், கடந்த சில ஆண்டுகளாகவே நகராட்சி அலுவலகத்தில், போதிய அலுவலர்கள், பணியாளர்கள் இல்லாததால், வளர்ச்சித் திட்டங்களில் தேக்க நிலை ஏற்பட்டு, பொதுமக்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை நிறைவேற்ற முடியாத சூழ்நிலை உள்ளது.

நகராட்சி பொதுப் பிரிவில் மேலாளர், கணக்கர், வருவாய் ஆய்வாளர், உதவியாளர், இளநிலை உதவியாளர், தட்டச்சர், புள்ளி விவர குறிப்பாளர், பதிவறை எழுத்தர், அலுவலக உதவியாளர் என 17 அலுவலர்கள் பணியாற்றி வருகின்றனர்.

பொறியியல் பிரிவில் பொறியாளர், உதவிப் பொறியாளர், பணி மேற்பார்வையாளர், பணி ஆய்வர், குழாய் பொருத்துநர், குளக்காவலர், மின் கம்பியாளர், மின் கம்பி உதவியாளர் என 15 அலுவலர்கள் பணியாற்ற வேண்டிய பிரிவில், தற்போது, 6 பேர் மட்டுமே பணிபுரிகின்றனர்.

இதேபோல, பொது சுகாதாரப் பிரிவில், துப்புரவு ஆய்வாளர், துப்புரவு மேற்பார்வையாளர், களப் பணி உதவியாளர், துப்புரவுப் பணியாளர், ஓட்டுநர், கொசு மருந்து தெளிப்பவர் என 58 பேர் பணியாற்ற வேண்டிய நிலையில், தற்போது, 41 பேர் மட்டுமே பணிபுரிகின்றனர்.

இந்தப் பிரிவுகளில் மொத்தம் 26 பணியிடங்கள் காலியாக உள்ளன. எனவே, மீதமுள்ள அலுவலர்களே அனைத்துப் பணிகளையும் மேற்கொள்ள வேண்டிய நிலை உள்ளது. இதிலும், முக்கிய அலுவலர்கள் விடுமுறையில் சென்றுவிட்டால், அலுவலகப் பணிகள் முற்றிலும் முடங்கி விடுவதாகக் கூறப்படுகிறது.

இரண்டாம் நிலை நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டவுடன், நகராட்சிப் பணிகளை மேற்கொள்ள 22 கூடுதல் பணியிடங்கள் நிரப்ப அரசு உத்தரவிட்டது. ஆனால், அந்தப் பணியிடங்கள் இதுவரை நிரப்பப்படவில்லை.

போதிய அலுவலர்கள் இல்லாததால் பிறப்பு, இறப்புச் சான்றிதழ், கொள்ளிடம் கூட்டுக் குடிநீர் இணைப்பு வழங்குதல், குடிநீர் விநியோகம், சாலை, மின் விளக்குகள் பராமரிப்பு, வரி வசூல், வளர்ச்சி திட்டப் பணிகளைக் கண்காணிப்பது உள்ளிட்ட பணிகளில் காலதாமதம் ஏற்படுகிறது. மேலும், இதனால், பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

பொறியாளர்கள் பற்றாக்குறையால், புதை சாக்கடை திட்டப் பணிகள் நிறைவடைந்தும், அந்தப் பகுதிகளில், தார்சாலை அமைக்கும் பணி தடைபட்டுள்ளது. இதனால், பொதுமக்கள் போக்குவரத்து நெரிசலில் சிக்கி சிரமப்பட்டு வருகின்றனர். துப்புரவுப் பணியாளர்கள் இல்லாததால், நகரின் அனைத்துப் பகுதிகளிலும் கொட்டப்பட்டுள்ள குப்பைகள் அகற்றப்படாமல் சுகாதாரக் கேடு ஏற்பட்டுள்ளது.

இங்கு பொறுப்பேற்கும் நகராட்சி ஆணையர்கள், அடிக்கடி பணியிட மாறுதலில் சென்றுவிடுவதால், கடந்த 5 ஆண்டுகளாக நகராட்சியின் வரவு, செலவு கணக்குகள் பராமரிக்கப்படாமல் உள்ளதாகக் கூறப்படுகிறது.

எனவே, நகர மக்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை நிறைவேற்றவும், வளர்ச்சித் திட்டங்களை விரைந்து முடிக்கவும், பெரம்பலூர் நகராட்சியில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே நகர மக்களின் எதிர்பார்ப்பாகும்.