Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

பெங்களூர் மாநகராட்சி நிலைக்குழு உறுப்பினர் 29ம் தேதி நியமனம்

Print PDF

தினகரன் 21.10.2010

பெங்களூர் மாநகராட்சி நிலைக்குழு உறுப்பினர் 29ம் தேதி நியமனம்

பெங்களூர், அக். 21: பெருநகர் பெங்களூர் மாநகராட்சியில் நியமனம் செய்யாமல் உள்ள 11 நிலைகுழுக்களுக்கு தலைவர் மற்றும் உறுப்பினர்களை வரும் 29ம் தேதி நியமிக்க மேயர் எஸ்.கே.நடராஜ் முடிவு செய்துள்ளார்.

பெங்களூர் பெருநகர் மாநகராட்சிக்கு 41 மாதங்கள் கழித்து கடந்த மார்ச் 28ம் தேதி தேர்தல் நடந்தது. இதில் மொத்தம் உள்ள 198 வார்டுகளில் 111 வார்டுகளில் பாஜ வெற்றி பெற்று பெருபான்மை பலத்துடன் நிர்வாகத்தை கைபற்றியது. பாஜ நிர்வாகத்தில் முதல் மேயராக எஸ்.கே.நடராஜ் மற்றும் துணை மேயராக என்.தயானந்த் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். மேயர், துணைமேயர் தேர்வு முடிந்த பின் மாநகராட்சி நிலைக்குழு தலைவர்கள் நியமனம் செய்யும் முயற்சியை மேயர் மேற்கொண்டார். நிலைக்குழு தலைவர் பதவிக்கு பாஜவில் பலர் முயற்சி செய்ததால், நியமனம் தாமதமாகியது.

இடையில் மாநகராட்சியில் 100 வார்டுகள் இருந்தபோது 8 நிலைக்குழுக்கள் இருந்தது. தற்போது மாநகராட்சி வார்டு எண்ணிக்கை 198 ஆக உயர்ந்துள்ளதால், நிலைக்குழு எண்ணிக்கையை 8ல் இருந்து 12 ஆக உயர்த்துவதுடன், உறுப்பினர் எண்ணிக்கையை 8ல் இருந்த 12 வரை உயர்த்த முடிவு செய்து மாநில அரசின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டது. மாநகராட்சி கோரிக்கையை பரிசீலனை செய்த அரசு நிலைக்குழுவை 12ஆக உயர்த்தி கொள்ள அனுமதிக்க முதல்வர் எடியூரப்பா தலைமையில் நடந்த அமைச்சரவை கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது. இதை தொடர்ந்து நிலைக்குழு எண்ணிக்கை உயர்த்தி அரசு எடுத்துள்ள முடிவுக்கு ஒப்புதல் கேட்டு ஆளுநருக்கு கோப்பு அனுப்பபட்டது. இதை பரிசீலனை செய்த ஆளுநர் கடந்த ஆகஸ்ட் 11ம் தேதி ஒப்புதல் வழங்கினார்.

இதை தொடர்ந்து நிலைக்குழு அமைக்கும் முயற்சியை மேயர் மேற்கொண்டார். 29ம் தேதி பாக்கியுள்ள பொது சுகாதாரம், நகர திட்டம் மற்றும் வளர்ச்சி, பெரிய வளர்ச்சி திட்டம், வார்டு அளவில் பொது வளர்ச்சி திட்டம், தணிக்கை, கல்வி, சமூகநீதி, மேல்முறையீடு, தோட்டக்கலை, மார்கெட், நிர்வாக சீர்த்திருத்தம் ஆகிய நிலை குழுக்களுக்கு தலைவர் மற்றும் உறுப்பினர்கள் நியமனம் செய்ய முடிவு செய்துள்ளார்.

இதில் ஏற்கனவே நியமனம் செய்யப்பட்டுள்ள நிதி மற்றும் வரி நிலைக்குழுவுடன் சேர்த்து மொத்தம் 12 நிலைக்குழு தலைவர்கள் மற்றும் 132 உறுப்பினர்கள் நியமிக்கப்படுவார்கள். இதில் நிலைக்குழு தலைவர் பதவியுடன் 84 பாஜ கவுன்சிலர்களுக்கு உறுப்பினராகும் வாய்ப்பு கிடைக்கும். மேலும் 48 எதிர்க்கட்சி கவுன்சிலர்களுக்கு உறுப்பினராகும் வாய்ப்பு கிடைக்கும். தற்போது நியமனம் செய்யப்படும் நிலைக்குழுவின் பதவி காலம் ஓராண்டு மட்டுமே. இதில் ஏற்கனவே 5 மாதம் கடந்துள்ளதால் இன்னும் 7 மாதங்கள் மட்டுமே தலைவர் மற்றும் உறுப்பினர்களாக செயல்படுவார்கள் என்பது குறிப்பிடதக்கது.