Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு: சென்னையில் 16 தொகுதிகளில் 29 லட்சம் வாக்காளர்கள்- மாநகராட்சி ஆணையர்

Print PDF

தினமணி                  26.10.2010

வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு: சென்னையில் 16 தொகுதிகளில் 29 லட்சம் வாக்காளர்கள்- மாநகராட்சி ஆணையர்

சென்னை மாநகராட்சி ரிப்பன் கட்டடத்தில் அனைத்து அரசியல் கட்சி பிரதிநிதிகளுக்கும், வரைவு வாக்காளர் பட்டியலை திங்கள்கிழமை வழங்கி ஆலோசனை நடத்துகிறார் தேர்தல்

சென்னை, அக். 25: சென்னையில் 16 சட்டப்பேரவை தொகுதிகளில் மொத்தம் 29 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர் என்று மாநகராட்சி ஆணையாளர் தா. கார்த்திகேயன் தெரிவித்தார்.

சென்னை மாநகராட்சி பொன்விழா கூட்டரங்கில் வரைவு வாக்காளர் பட்டியலை அனைத்து கட்சி பிரதிநிதிகளுக்கு வழங்கி மாவட்ட தேர்தல் அலுவலரும், மாநகராட்சி ஆணையாளருமான தா. கார்த்திகேயன் திங்கள்கிழமை ஆலோசனை நடத்தினார்.

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியது:

சென்னை மாநகராட்சிக்குட்பட்ட 16 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான வரைவு வாக்காளர் பட்டியலின் நகல்கள், குறுந்தகடுகள் ஆகியவை அனைத்துக் கட்சிகளை சேர்ந்த பிரதிநிதிகளுக்கும் வழங்கப்பட்டுள்ளன. சென்னையில் மொத்தம் 950 வாக்குச் சாவடிகள் உள்ளன.

ஆண்கள் 14 லட்சத்து 68 ஆயிரத்து 769 பேரும், பெண்கள் 14 லட்சத்து 65 ஆயிரத்து 434 பேரும் என மொத்தம் 29 லட்சத்து 31 ஆயிரத்து 203 வாக்காளர்கள் உள்ளனர்.

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 18 வயது நிரம்பியிருக்க வேண்டும். ஜனவரி 1-ம் தேதியில் 18 வயதை பூர்த்தி செய்யும் வாக்காளர்களும் தங்களது பெயரைப் பட்டியலில் சேர்க்கலாம். பதிவு செய்யக் கோரும் பகுதியில் வசிக்க வேண்டும்.

சென்னை மாநகராட்சியின் 10 மண்டல அலுவலகங்களிலும், பொதுமக்கள் வாக்களிக்கும் அந்தந்த வாக்குச் சாவடிகளிலும் இந்த படிவங்கள் கிடைக்கும். பெயர் சேர்க்க விரும்பும் வாக்காளர்கள் படிவம் -6 ஐயும், பெயர் நீக்க விரும்புவர்கள் படிவம் 7-ஐயும் பெற்று பூர்த்திச் செய்து அளிக்க வேண்டும்.

ஏற்கெனவே அளித்த மனுவில் பெயர், வயது, பாலினம், உறவுமுறை ஆகியவற்றில் திருத்தம் மேற்கொள்பவர்கள் படிவம் - 8ஐயும், ஒரே தொகுதியில் மாறியிருந்தால் படிவம் 8-ஐயும் பெற்று பூர்த்தி செய்ய வேண்டும்.

அக்டோபர் 25-ம் தேதி முதல் மனுக்களை பூர்த்தி செய்து அனுப்பலாம். மனுக்கள் வந்து சேர வேண்டிய கடைசி நாள் நவம்பர் 9-ம் தேதியாகும். இந்நிலையில், வாக்காளர்களின் வசதிக்காக அக்டோபர் 30-ம் தேதியும், நவம்பர் 7-ம் தேதியும் சிறப்பு முகாம்கள் நடத்தப்படுகின்றன.

வாக்காளர் பட்டியலில் பெயரைச் சேர்க்கும் வாக்காளர்கள் தங்கள் பிறப்புச் சான்று நகல் அல்லது பள்ளிச் சான்று நகல் ஆகியவற்றையும், இருப்பிட சான்றை உறுதி செய்யும் வகையில் குடும்ப அட்டை, ஓட்டுநர் உரிமம், மின்சாரம், காஸ் இணைப்பு ரசீது உள்ளிட்டவற்றில் ஏதாவது ஒன்றையும், பாஸ்போர்ட் அளவு புகைப்படத்தையும் படிவத்துடன் இணைத்து அனுப்ப வேண்டும்.

19 வாக்குச் சாவடிகள் மாற்றம்: சென்னையில் மொத்தம் 950 வாக்குச் சாவடிகள் உள்ளன. சில இடங்களில் மக்கள் குறைவாக உள்ள பகுதிகளில் இரண்டு வாக்குச் சாவடிகள் உள்ளன. மக்கள் அதிகம் இருக்கும் சில பகுதிகளில் ஒரு வாக்குச் சாவடி உள்ளது. எனவே, அது போன்ற வாக்குச்சாவடிகள் கண்டறியப்பட்டு பொதுமக்களின் வசதிக்காக 19 வாக்குச் சாவடிகள் மாற்றப்பட இருக்கின்றன.

சட்ட மேலவை - ஆசிரியர் சங்கங்களுடன் பேச்சு: சட்ட மேலவை தேர்தலில் வாக்களிக்க பட்டதாரிகளுக்கான விண்ணப்பங்கள் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டவை வழங்கப்பட்டுள்ளன. அவற்றில் 1, 500 விண்ணப்பங்கள் பூர்த்தி செய்து வந்துள்ளன. அதே போல, ஆசிரியர் வாக்காளர்களுக்கு 866 விண்ணப்பங்கள் வழங்கப்பட்டு, அவற்றில் 40 விண்ணப்பங்கள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன. இதில், ஆசிரியர்களின் எண்ணிக்கை மிகக் குறைவாக இருப்பதால், அவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும்பொருட்டு அடுத்த வாரம் ஆசிரியர்கள் சங்கங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட இருக்கின்றன என்றார் அவர்.

திமுக வழக்கறிஞர் பிரிவு செயலாளர் கிரிராஜ், அதிமுக தென் சென்னை மாவட்டச் செயலாளரும், எம்.எல்..-வுமான செந்தமிழன், காங்கிரஸ் கட்சியின் சார்பாக சென்னை மாநகராட்சி எதிர்க்கட்சித் தலைவர் சைதை ரவி உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Last Updated on Tuesday, 26 October 2010 11:04