Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

பெங்களூர் மாநகராட்சி நிலைக்குழு உறுப்பினர் 30ம் தேதி நியமனம்

Print PDF

தினகரன்                      27.10.2010

பெங்களூர் மாநகராட்சி நிலைக்குழு உறுப்பினர் 30ம் தேதி நியமனம்

பெங்களூர், அக். 27: பெங்களூர் பெருநகர் மாநகராட்சிக்கு 41 மாதங்கள் கழித்து கடந்த மார்ச் 28ம் தேதி தேர்தல் நடந்தது. இதில் மொத்தம் உள்ள 198 வார்டுகளில் 111 வார்டுகளில் பாஜ வெற்றி பெற்று பெருபான்மை பலத்துடன் நிர்வாகத்தை கைபற்றியது. பாஜ நிர்வாகத்தில் முதல் மேயராக எஸ்.கே.நடராஜ் மற்றும் துணை மேயராக என்.தயானந்த் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

நிலைக்குழு எண்ணிக்கையை உயர்த்துவதற்கு ஆளுநர் கடந்த ஆகஸ்ட் 11ம் தேதி ஒப்புதல் வழங்கினார். ஆளும் கட்சியில் நிலைக்கு தலைவர் பதவியை பிடிக்க கடும் போட்டி நிலவியதால், முதல் கட்டமாக வரி மற்றும் நிதிநிலைக்குழு தலைவராக சதாசிவாவை கடந்த ஆகஸ்ட் மாதம் மேயர் நியமனம் செய்தார். அவர் ஆகஸ்ட் 31ம்தேதி நடப்பு நிதியாண்டிற்கான பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.

மீதியுள்ள 11 நிலைக்குழுகளுக்கு தலைவர் மற்றும் உறுப்பினர்கள் நியமனம் செய்யாமல் இருப்பதற்கு எதிர்க்ட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். இனியும் காலம் தாழ்த்துவது சரியல்ல என்ற முடிவுக்கு வந்துள்ள மேயர் நடராஜ், வரும் 30ம் தேதி காலியாகவுள்ள 11 நிலைக்குழுவின் தலைவர் மற்றும் உறுப்பினர்களை நியமனம் செய்ய முடிவு செய்துள்ளார்.

இது தொடர்பாக மாநகராட்சி பாஜ தலைவர் சத்யநாராயணா, மாநகர பாஜ தலைவரும், பேரவை உறுப்பினருமான விஜயகுமார் மற்றும் சட்ட நிபுணர்களுடன் மேயர் நடராஜ் நேற்று ஆலோசனை நடத்தினார்.

இதில் பொது சுகாதாரம், நகர திட்டம் மற்றும் வளர்ச்சி, நகரில் செயல்படுத்தப்படவுள்ள பெரியளவிலான வளர்ச்சி திட்டம், வார்டு அளவில் பொது வளர்ச்சி திட்டம், தணிக்கை, கல்வி, சமூகநீதி, மேல்முறையீடு, தோட்டக்கலை, மார்க்கெட், நிர்வாக சீர்த்திருத்தம் ஆகிய நிலை குழுக்களுக்கு தலைவர் மற்றும் உறுப்பினர்கள் நியமிக்க முடிவு செய்யப்பட்டது. 11 நிலைகுழுவின் தலைவர்கள் பாஜவுக்கு வழங்கப் படுகிறது. நிலைகுழுவில் 11 உறுப்பினர்களில் 7 பாஜவுக்கும், 4 காங்கிரஸ் மற்றும் மஜதவுக்கு அளிப்பதென்று முடிவு செய்யப்பட்டது.

மாநகராட்சி நிலை குழு தலைவர் மற்றும் உறுப்பினர்கள் வரும் 30ம் தேதி தேர்வு செய்வதை தொடர்ந்து பாஜ மூத்த கவுன்சிலர்களான வெங்கடேசமூர்த்தி, சோமசேகர், ராமமூர்த்தி, எல்.சீனிவாஸ், வி.பி.கணேஷ், ரங்கண்ணா, கங்கபைரய்யா, ரவீந்திரா, சாந்தகுமாரி, நஞ்சுண்டப்பா, ஹரிஷ் உள்பட பலர் தங்கள் ஆதரவு தலைவர்கள் மூலம் முயற்சி மேற்கொண்டு வருகிறார்கள். எதிர்க்கட்சிகள் சார்பில் நிலைக்குழு உறுப்பினர்கள் யார் என்பதை எதிர்க்கட்சி தலைவர் நாகராஜ் மற்றும் மாநகராட்சி மஜத தலைவர் பத்மநாபரெட்டி ஆகியோர் தேர்வு செய்துள்ளனர். இரண்டொரு நாளில் மேயரிடம் பட்டியல் கொடு க்க முடிவு செய்துள்ளனர். தற்போது அமைக்கப்படும் நிலைகுழுவின் பதவி காலம் 6 மாதங்கள் என்பது குறிப்பிடதக்கது.