Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

நகராட்சிப் பணிகள் நவம்பர் 30-க்குள் தொடங்கும்

Print PDF

தினமணி 27.10.2010

நகராட்சிப் பணிகள் நவம்பர் 30-க்குள் தொடங்கும்

கடலூர், அக். 26: கடலூர் திருப்பாப்புலியூர் ரயில்வே சுரங்கப்பாதைத் திட்டத்தில், நகராட்சி சம்மந்தப்பட்ட பணிகள், நவம்பர் 30-ம் தேதிக்குள் தொடங்கப்படும் என்று, சட்டப் பேரவை மதிப்பீட்டுக் குழுத் தலைவர் குத்தாலம் எம்.எல்.. .அன்பழகன் தெரிவித்தார்.

சட்டப்பேரவை மதிப்பீட்டுக் குழு, கடலூர் மாவட்டத்தில் திங்கள்கிழமை பல்வேறு திட்டங்களைப் பார்வையிட்டது. மதிப்பீட்டுக் குழுவிடம் கடலூர் அனைத்து பொது நல அமைப்புகளின் ஒருங்கிணைப்பாளர் எம்.நிஜாமுதீன் கோரிக்கை மனு ஒன்றை அளித்தார். கடலூர் சுரங்கப் பாதைத் திட்டத்துக்கு ரயில்வே இலாகா டெண்டர் விட்டு 3 மாதங்கள் ஆகியும், மாநில நெடுஞ்சாலைத் துறை தனது பணிக்கு இதுவரை டெண்டர் விடாமல் காலம் கடத்தி வருகிறது.

கடலூரில் உள்ள 4 வியாபாரிகளின் குடும்பங்களைச் சேர்ந்தவர்கள்தான் தடையாக இருக்கிறார்கள். அவர்களுக்காகவே நெடுஞ்சாலைத்துறை காலம் கடத்துகிறது. சுரங்கப்பாதைத் திட்டத்துக்கு விரைவில் டெண்டர் விட்டால், கடலூர் மக்கள் அனைவரும் வாழ்த்துவர் என்று குறிப்பிட்டு இருந்தார்.

மாலையில் மாவட்ட அதிகாரிகளுடனான மதிப்பீட்டுக் குழு ஆய்வுக்குக் கூட்டத்தில் கலந்துகொண்ட பின், குழுத் தலைவர் அன்பழகன் எம்.எல்.. கூறியது:

சுரங்கப் பாதை பணியை ரயில்வே தொடங்கி விட்டதாக அறிவித்து இருக்கும் நிலையில், மேற்கொண்டு பணிகளை தொடங்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

நகராட்சி மேற்கொள்ள வேண்டிய பணிகள் நவம்பர் 30-ம் தேதிக்குள் தொடங்கப்படும். நிச்சயமாக கடலூரில் ரயில்வே சுரங்கப்பாதை அமைக்கப்படும் என்றார்.

கலைஞர் வீடுகள் வழங்கும் திட்டத்தில், கடலூர் மாவட்டத்தில் வீடுகள் கட்டப்பட்டு பயனாளிகளுக்கு முதல்வர் கருணாநிதியால் ஒப்படைக்கப்பட்டு இருப்பது பாராட்டுக்கு உரியது.

ஆய்வு மேற்கொள்ளப்பட்ட பாலங்களின் பணிகள் தொடங்க அரசுக்கு பரிந்துரைக்கப்படும் என்றும் அன்பழகன் தெரிவித்தார்.

காடாம்புலியூர் தெற்குத் தெருவைச் சேர்ந்த சிவகாமி என்பவர் முதியோர் உதவித்தொகை கேட்டு, மதிப்பீட்டுக் குழுவிடம் காலையில் மனு கொடுத்து இருந்தார். மாலையில் அவருக்கு முதியோர் உதவித்தொகைக்கான ஆணையை அன்பழகன் வழங்கினார்.

மொத்தம் 21 பேருக்கு முதியோர் உதவித் தொகை, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை மூலம் 3 பேருக்கு தையல் இயந்திரங்கள், 3 பேருக்கு சலவைப்பெட்டி ஆகியவற்றையும் அவர் வழங்கினார்.

மதிப்பீட்டுக் குழு ஆய்வுக் கூட்டத்தில் மதிப்பீட்டுக் குழு உறுப்பினர்கள் எம்.எல்..க்கள் சபா.ராஜேந்திரன், ராமசாமி, டாக்டர் சதன் திருமலைக்குமார், ஆர்.செüந்தர பாண்டியன், அங்கயற்கண்ணி ஆகியோரும் கடலூர் எம்.எல்.. கோ.அய்யப்பன், மாவட்ட ஆட்சியர் பெ.சீதாராமன், மாவட்ட வருவாய் அலுவலர் எஸ்.நடராஜன் உள்ளிட்ட அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

Last Updated on Wednesday, 27 October 2010 11:01