Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

குடந்தை நகராட்சியின் அசையும் சொத்துக்களை ஜப்தி செய்ய உத்தரவு கோர்ட் ஊழியர்கள் சென்றதால் பரபரப்பு

Print PDF

தினகரன்                28.10.2010

குடந்தை நகராட்சியின் அசையும் சொத்துக்களை ஜப்தி செய்ய உத்தரவு கோர்ட் ஊழியர்கள் சென்றதால் பரபரப்பு

கும்பகோணம், அக். 28: கும்பகோணம் நகராட்சியின் அசையும் சொத்துக்களை ஜப்தி செய்ய நேற்று கோர்ட் ஊழியர்கள் சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் 2004ம் ஆண்டு மகாமக திருவிழாவின் போது சிறப்பு நிதி ஒதுக்கீட்டின்கீழ் ஒலைப்பட்டினம் வாய்க்கால் 4 கிமீ தூரம் தூர்வார ரூ.25 லட்சம் ஒதுக்கப்பட்டது. இதற்கான டெண்டரை எடுத்து ஒப்பந்ததாரர் தஞ்சையை சேர்ந்த நடேசன் பணி மேற்கொண்டார்.

ரூ.18 லட்சத்திற்கான பணிகளை முடித்து தொகைகேட்டு பில்பட்டியலை ஒப்பந்ததாரர் கும்பகோணம் நகராட்சி இளநிலை பொறியாளரிடம் சமர்ப்பித்தார். பணம் வழங்கப்படாததால் பலமுறை நகராட்சி அலுவலகத்தை தொடர்பு கொண்டார். இறுதியாக ஒலைப்பட்டினம் வாய்க்கால் தூர் வாரியது தொடர்பாக கோப்பு இங்கில்லை என அதிகாரிகள் கூறினர். இதையடுத்து 2007¢ ஆண்டு நடேசன் தகுந்த ஆதாரத்துடன் தஞ்சை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் தனக்குரிய பணத¢தை பெற்றுத்தருமாறு மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கு 2008ம் ஆண்டு தஞ்சை மாவட்ட விரைவு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது.

இவ்வழக்கை விசாரித்த விரைவுநீதிமன்ற நீதிபதி கடந்த ஜூன் 30ம் தேதி ஒலைப்பட்டினம் வாய்க்கால் தூர்வாரியதற்கு ரூ. 18 லட்சம், அதற்கான வட்டி, செலவுத்தொகை சேர்த்து ரூ.40 லட்சத்து 6 ஆயிரத்தை கும்பகோணம் நகராட்சி ஆணையர் வழங்க வேண்டும் என உத்தரவிட்டார். 3 மாதகால காலமாகியும் பணம் தராததால், நடேசன் தஞ்சை விரைவு நீதிமன்றத்தில் நிறைவேற்றும் மனு தாக்கல் செய்தார். மனுவை விசாரித்த நீதிபதி சந்திரன் நடேசனுக்கு பணம் வழங்காத கும்பகோணம் நகராட்சியின் அனைத்து அசையும் சொத்துகளை ஜப்தி செய்து அதனை பொது ஏலத்தில் விற்று அதற்குரிய பணத்தை பெற்றுக்கொள்ளலாம் என கடந்த 8ம் தேதி உத்தரவிட்டார்.

அதன்படி நேற்று தஞ்சை விரைவு நீதிமன்ற ஊழியர்கள் மதியழகன், ராஜசேகர், ஒப்பந்தகாரர் நடேசன் ஆகியோர் கும்பகோணம் நகராட்சி அலுவலகத்திற்கு ஜப்தி செய்ய வந்தனர். இத்தகவலறிந்ததும் நகராட்சி வளாகத்தில் நிறுத்தப்பட்ட அனைத்து வாகனங்களையும் டிரைவர்கள் அவசர அவசரமாக வெளியே எடுத்து சென்றனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

பின்னர் ஒப்பந்தகாரர் நடேசனிடம் கும்பகோணம் நகராட்சி ஆணையர் வரதராஜன் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது ஆணையர் அளித்த உறுதியின் பேரில் ஜப்தி நடவடிக்கை தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டது.