Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

மக்கி போகிறது நகராட்சி வாகனங்கள்

Print PDF

தினமலர்              29.10.2010

மக்கி போகிறது நகராட்சி வாகனங்கள்

தாம்பரம் : தாம்பரம் நகராட்சி வளாகத்தில் பழுதடைந்த கார், வேன், லாரி ஆகிய வாகனங்கள் பல ஆண்டுகளாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இந்த வாகனங்கள் துருப்பிடித்து எந்த பயனும் இல்லாமல் போவதற்குள், அவற்றை ஏலத்தில் விட நடவடிக்கை எடுக்க வேண்டும்.நகராட்சி அதிகாரிகள் பயன்படுத்தி வரும் வாகனங்கள், இயக்க முடியாத அளவிற்கு பழுதடைந்து விட்டால், அவை ஓரம் கட்டப்படும். இதுபோன்ற வாகனங்கள், நகராட்சி வளாகத்தில் நிறுத்தி வைக்கப்படுகின்றன. பின், அவை ஏலத்தில் விடப்படும். ஆனால், தாம்பரம் நகராட்சி அதிகாரிகள் பயன்படுத்தி, பழுதடைந்த கார், வேன், லாரி, ஜீப் போன்ற 15 வாகனங்கள் நகராட்சி வளாகத்திலும், அம்பேத்கர் திருமண மண்டபத்திலும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இவற்றின் மதிப்பு பல லட்ச ரூபாய்.பல ஆண்டுகளாக இந்த வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால், அவற்றில் உள்ள முக்கிய பாகங்கள் துருப்பிடித்துள்ளன. டயர்கள் மக்கி போய் விட்டன. வாகனத்தில் எஞ்சியுள்ள சில பொருட்கள் திருடு போய் விடுகின்றன. மொத்தத்தில், அந்த வாகனங்கள் எதற்கும் பயனின்றி, மண்ணோடு மண்ணாக மக்கி வருகின்றன.மேலும், அந்த வாகனங்களால், மற்ற வாகனங்கள் நிறுத்த முடியாமல் போய் விடுகிறது. பல ஆண்டுகளாக நிறுத்தப்பட்டுள்ள வாகனங்களை ஏலத்தில் விட்டால், நகராட்சிக்கு வருமானம் கிடைக்கும். மக்கள் வரிப்பணம் மீதமாகும். எனவே, மக்கிக் கொண்டிருக்கும் வாகனங்களை உடனடியாக ஏலத்தில் விட, தாம்பரம் நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.