Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

குடிநீர் பிரச்னையைத் தீர்க்க நடவடிக்கை

Print PDF

தினமணி                     29.10.2010

குடிநீர் பிரச்னையைத் தீர்க்க நடவடிக்கை

அறந்தாங்கி, அக். 28: அறந்தாங்கி நகர்மன்றக் கூட்டத்தில் திமுக உறுப்பினர் ஜி.எம்.ஆர். ராஜேந்திரன் வெளிநடப்பு செய்தார்.

அறந்தாங்கி நகர்மன்றத்தின் சாதாரண கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. நகர்மன்றத் தலைவர் பழ. மாரியப்பன் தலைமை வகித்தார். துணைத் தலைவர் டி..என். கச்சுமுஹம்மது, ஆணையர் பா. அசோக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ஜி.எம்.ஆர். ராஜேந்திரன் (திமுக): எனது வட்டத்துக்கு இரண்டாம் கட்டமாக வழங்க வேண்டிய 105 வண்ணத் தொலைக்காட்சி பெட்டிகள் அலுவலகத்திற்கு வந்த பின்னரும், 2 மாதங்களாக நகராட்சி நிர்வாகம் அவற்றை விநியோகிக்கவில்லை. சாலை மேம்பாட்டுத் திட்டத்திலும் எனது வட்டம் முற்றிலுமாகப் புறக்கணிக்கப்பட்டுள்ளது. இதைக் கண்டித்து வெளிநடப்பு செய்கிறேன் (இப்படிக் கூறிவிட்டு வெளிநடப்பு செய்தார் ராஜேந்திரன்).

தலைவர்: ""கடந்த ஞாயிற்றுக்கிழமை தொலைக்காட்சிப் பெட்டிகளை வழங்கலாம் என்று முடிவெடுத்தபோது, தான் வெளியூர் செல்வதால் தேதியை மாற்றும்படி அவர்தான் கேட்டுக்கொண்டார்; இப்போது அவரே வெளிநடப்பு செய்கிறார்.''

லெ. முரளிதரன் (திமுக): ""அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் முறையாக கிடைக்க குடிநீர் இணைப்புகளில் வேகத்தைக் கட்டுப்படுத்தும் கருவி அமைக்க வேண்டும். கோட்டை கொத்தவால் சாவடியில் 272 வீடுகள் உள்ளன. இந்த இடம் தொல்பொருள் ஆராய்ச்சி துறைக்கு சொந்தமான இடம் என்பதால் குடியிருப்பவர்களுக்கு பட்டா கிடைக்கவில்லை. ஆகவே, அந்த இடத்தை நகராட்சிக்கு வகைமாற்றம் செய்து பட்டா வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும்.''

தலைவர்: ""இந்த இடத்தைப் பற்றி ஏற்கெனவே மத்திய அமைச்சர் எஸ். ரகுபதி மூலம் சம்பந்தப்பட்ட துறைக்கு மனு அளிக்கப்பட்டுள்ளது. நிலத்தை வகைமாற்ற விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும். குடிநீர்

இணைப்பில் வேகக் கட்டுப்பாட்டுக் கருவி வைத்தால் பள்ளம் மேடு போன்ற இடங்களில் குடிநீர் செல்வது பாதிக்கப்படும். இருந்தாலும் உறுப்பினரின் கோரிக்கைபடி மன்றத்தில் தீர்மானம் வைக்கப்படும்.''

வி.ஆர்.எஸ். சுப்பிரமணியன் (திமுக): ""குடிநீர் இணைப்பு வழங்குவதில் பல முறைகேடுகள் நடக்கின்றன.''

சு. ரமேஷ் (திமுக): ""குடிநீர் கிடைப்பதில் பிரச்னை இருந்தால் எந்த நேரத்திலும் சந்திக்கலாம் என்று துணை முதல்வர் கூறியுள்ளார். அறந்தாங்கியில் 4 முதல் 5 அடி ஆழத்தில் பள்ளம் வெட்டி குடிநீர் குழாயில் தண்ணீர் பிடிக்கும் நிலை உள்ளது.

ஆகவே, 27 வட்ட உறுப்பினர்களும் வருகிறோம். துணை முதல்வரை நேரில் சந்தித்து மனு அளித்து தீர்வு கிடைக்க நீங்கள் முயற்சி எடுக்க வேண்டும்.''

தலைவர்: ""இதுகுறித்து ஆய்வுசெய்ய நகராட்சி மண்டல அலுவலகத்திலிருந்து ஒரு குழு விரைவில் வரவுள்ளது. உறுப்பினரின் கோரிக்கை பரிசீலிக்கப்படும்.''

கோ. நாராயணசாமி (திமுக): ""தெரு விளக்கிற்கு மின் உபகரணங்கள் இல்லாத காரணத்தால் தெருவிளக்குகளைப் பராமரிக்க முடியவில்லை என்று ஊழியர்கள் கூறுகிறார்கள். ஆகவே, உபகரணங்கள் தட்டுப்பாடின்றிக் கிடைக்கச் செய்ய வேண்டும். எல்.என்.புரத்தில் பகுதி நேர நியாயவிலைக் கடை ஒழுங்காக செயல்படுவதில்லை, தீபாவளி நேரத்தில் பொருள் வாங்க மக்கள் சிரமப்படுகிறார்கள்.''

தலைவர்: ""மின் உபகரணங்கள் உடனுக்குடன் வாங்கப்படுகின்றன. பணியாளர் பற்றாக்குறை காரணமாக ரேஷன் கடைகள் முழுமையாக இயங்க முடியவில்லை.''

இவ்வாறு விவாதம் நடைபெற்றது.