Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

ஈரோட்டை தன்னிறைவு பெற்ற மாநகராட்சியாக்க நடவடிக்கை

Print PDF

தினகரன்              02.11.2010

ஈரோட்டை தன்னிறைவு பெற்ற மாநகராட்சியாக்க நடவடிக்கை

ஈரோடு, நவ.2: ஈரோடு மாநகராட்சியை தன்னிறைவு பெற்ற மாநகராட்சியாக உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலெக்டர் சவுண்டையா பேசினார்.

ஈரோடு மாநகராட்சியில் நேற்று உள்ளாட்சிகள் தினவிழா கொண்டாடப்பட்டது. மேயர் குமார்முருகேஷ் தலைமை தாங்கினார். பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு மாவட்ட கலெக்டர் சவுண்டையா பரிசு வழங்கி பேசியதாவது:

அனைத்து உள்ளாட்சி அமைப்புகளும் சிறப்பாக செயல்பட வேண்டும் என்று தமிழக அரசு பல்வேறு திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்து செயல்படுத்தி வருகிறது. குறிப்பாக 5 ஆண்டுகளில் குடிநீருக்காக பலகோடி ரூபாயை ஒதுக்கியுள்ளது. திட்டத்தில் சிறு, சிறு குறைபாடுகள் இருந்தாலும் அனைத்து திட்டங்களுமே சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.

நகராட்சி, மாநகராட்சிகளின் உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த ஆயிரம் கோடி ரூபாயை தமிழக முதல்வர் அறிவித்து அதற் கான ஆணையை வழங்கியுள்ளார். ஜனவரி மாதத்திற்குள் பணிகள் அனைத்தும் முடிக்கப்பட்டு மக்களின் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படவுள்ளது. ஈரோடு மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்டம், குடிநீர் திட்டம் போன்ற பணிகளுக்காக 460 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. கூட்டு குடிநீர் திட்டம் ரூ.250 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்த அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்த பணிகள் அனைத்தும் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் முடிக்கப்படும். தமிழகத்தில் உள்ள 12,623 ஊராட்சி, பேரூராட்சிகள், மாநகராட்சிகளில் எவ்வித பாரபட்சமும் இன்றி மத்திய, மாநில அரசுகள் நிதி ஒதுக்கி செயல்படுத்தப்பட்டு வருகிறது. மத்திய அரசு மற்றும் வீட்டுவசதி வாரியத்தின் சார்பில் வீடு கட்ட குறைந்த வட்டியில் கடனுதவிகள் வழங்கப்பட்டு வரு கிறது. இந்த மாநகராட்சியை தன்னிறைவு பெற்ற மாநகராட்சியாக உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும்என்றார்.

மாநகராட்சியின் பணி களை விளக்கிடும் வகையில் பேரணி நடந்தது. மாநகராட்சி அலுவலகத்தில் தொடங்கிய இந்த பேரணி பிரப்ரோடு, மேட்டூர்ரோடு வழியாக வ..சி.பூங்காவை சென்றடைந்தது. இதில் மகளிர் சுயஉதவிக்குழுக்கள், பள்ளி குழந்தைகள், மாநகராட்சி பணியாளர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்ச்சியில், ஈரோடு பாராளுமன்ற உறுப்பினர் கணேசமூர்த்தி, ஈரோடு சட்டமன்ற உறுப்பினர் ராஜா, மாநகராட்சி ஆணையாளர் பாலச்சந்திரன் மற்றும் உள்ளாட்சி அமைப்பின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

நேற்று மாநகராட்சி சார்பில் நடந்த உள்ளாட்சிகள் தினவிழாவை காங்கிரஸ், அதிமுக கவுன்சிலர்கள் புறக்கணித்தனர். தமிழக அரசு உள்ளாட்சிகள் தினவிழாவை சிறப்பாக கொண்டாட வேண்டும் என்றும், கவுன்சிலர்களுக்கு போட்டிகள் நடத்த வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டு மற்ற மாநகராட்சிகளில் நடத்தப்பட்டது. ஆனால் ஈரோடு மாநகராட்சியில் போட்டிகளும் நடத்தவில்லை. மாநகராட்சி கூட்டத்தையும் முறையாக நடத்துவதில்லை என்பதால் புறக்கணிப்பு செய்ததாக காங்கிரஸ் கவுன்சிலர்கள் தெரிவித்தனர்.