Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

தூத்துக்குடி மாநகராட்சியில் உள்ளாட்சி தினவிழா

Print PDF

தினமலர்                    02.11.2010

தூத்துக்குடி மாநகராட்சியில் உள்ளாட்சி தினவிழா

தூத்துக்குடி : தூத்துக்குடி மாநகராட்சியில் நடந்த உள்ளாட்சி தினவிழாவில் கயிறு இழுக்கும் போட்டியில் கமிஷனர் குபேந்திரன் தலைமையிலான அணி வெற்றி பெற்றது. பெண்கள் பிரிவில் மேயர் தலைமையிலான அணிக்கு பரிசு கிடைத்தது. தமிழகத்தில் நவம்பர் 1ம் தேதி உள்ளாட்சி தினவிழா கொண்டாட வேண்டும் என்று துணை முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டு கடந்து மூன்று ஆண்டுகளாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதனை ஒட்டி அனைத்து உள்ளாட்சி அமைப்புகளிலும் போட்டி நடத்தி மக்கள் பிரதிநிதிகளை பங்கேற்க செய்து கலகலப்பாக இதனை கொண்டாடவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தூத்துக்குடி மாநகராட்சியில் நேற்று உள்ளாட்சி தின விழா மேயர் கஸ்தூரிதங்கம் தலைமையில் நடந்தது. கமிஷனர் குபேந்திரன் வரவேற்றார், இன்ஜினியர் ராஜகோபாலன், இளநிலை பொறியாளர்கள் சரவணன், பிரின்ஸ், வருவாய் அலுவலர் ஜெயக்குமார், சுகாதார ஆய்வாளர்கள் ஸ்டாலின் பாக்கியநாதன், ராஜசேகர் மற்றும் துரைமணி மற்றும் அதிகாரிகள், கவுன்சிலர்கள், மாநகராட்சி ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

விழாவிற்காக மாநகராட்சி புதிய அலுவலகம் முன்பாக போடப்பட்டிருந்த சாமியான பந்தலில் விழா மற்றும் போட்டிகள் நடந்தது. மாவட்ட இசைப்பள்ளி மாணவ, மாணவிகளின் பல்வேறு கலைநிகழ்ச்சிகள் நடந்தது. பின்னர் மாநகராட்சி பள்ளி மாணவ, மாணவிகளுக்கு நடந்த பேச்சு, கட்டுரை, ஓவிய போட்டிகள் நடந்தது. வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா நடந்தது. பின்னர் மக்கள் பிரதிநிதிகள், அதிகாரிகளுக்குள் போட்டி நடந்தது. ஆண், பெண்களுக்கு தனித்தனியாக கயிறு இழுக்கும் போட்டி நடந்தது. பெண்கள் பிரிவுக்கு நடந்த போட்டியில் மேயர் தலைமையில் கவுன்சிலர்கள், பெண் ஊழியர்கள், மாநகராட்சி மேலாளர் (பொ) ஆறுமுகத்தம்மாள் தலைமையில் அணியும் மோதி கயிறுஇழுத்தனர். இதில் மேயர் கஸ்தூரிதங்கம் அணி வெற்றி பெற்றது. ஆண்களுக்கான பிரிவில் கமிஷனர் குபேந்திரன் தலைமையில் ஒரு அணியும், இன்ஜினியர் ராஜகோபாலன் தலைமையில் ஒரு அணியும் மோதியது. இரண்டிலும் ஊழியர்கள், கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர். இதில் கமிஷனர் குபேந்திரன் அணி வெற்றி பெற்றது. பெண்களுக்கான மியூசிக்கல் சேர் போட்டியில் மேயர் வெற்றி பெற்றார். வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிக்கப்பட்டது.

முன்னதாக மாநகராட்சி பழைய கட்டடத்தில் உள்ள தலைவர்கள் சிலைக்கு உள்ளாட்சி தினவிழாவை ஒட்டி மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது.