Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

ரூ50 லட்சத்தில் அமைக்கப்படுகிறது அண்ணா நகரில் 2 கி.மீ. தூரம் சைக்கிளில் செல்ல தனிப்பாதை ஜனவரியில் திறப்பு

Print PDF

தினகரன்             04.11.2010

ரூ50 லட்சத்தில் அமைக்கப்படுகிறது அண்ணா நகரில் 2 கி.மீ. தூரம் சைக்கிளில் செல்ல தனிப்பாதை ஜனவரியில் திறப்பு

சென்னை, நவ.4: சைக்கிளில் செல்பவர்களுக்காக அண்ணா நகரில் தனிப்பாதை ஜனவரியில் திறக்கப்படும் என்று மேயர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

சைதாப்பேட்டை பெண்கள் மேல்நிலைப்பள்ளியில், மாணவிகளுக்கு இலவச சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதில், மாணவிகளுக்கு சைக்கிள்களை வழங்கி மேயர் மா.சுப்பிரமணியன் பேசியதாவது:

இலவச சைக்கிள் வழங்கும் திட்டத்தின் கீழ், கடந்த 4 ஆண்டுகளில் 15 லட்சத்து 47,242 சைக்கிள்கள் ரூ358 கோடி செலவில் பிளஸ்&1 வகுப்பில் பயின்ற பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் சீர்மரபினர் பிரிவைச் சேர்ந்த மாணவர்களுக்கு முதல்வர் கருணாநிதி வழங்கியுள்ளார்.

இந்த ஆண்டு 5 லட்சத்து 68,359 மாணவர்களுக்கு இந்த சைக்கிள் வழங்கும் திட்டத்தை முதல்வர் தொடங்கி வைத்துள்ளார். சென்னையில் 7,203 மாணவர்களுக்கு இன்று சைக்கிள்கள் வழங்கப்படுகிறது.

ஐரோப்பிய நாடுகளில் சைக்கிளில் செல்வதற்காக தனிப்பாதை அமைக்கப்பட்டுள்ளது. அதே போன்று சியான் நகரில் சைக்கிள்களை வைப்பதற்காகவே ரயில்களில் கடைசியாக தனிப்பெட்டி ஒதுக்கப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சி மூலம் முதல்முறையாக அண்ணாநகரில் 14 கி.மீ நீளத்துக்கு சைக்கிளில் செல்ல தனிப்பாதை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

அதில் முதல்கட்டமாக அண்ணாநகரில் 5வது அவென்யூ மற்றும் 6வது அவென்யூவில் மாணவர்கள் மற்றும் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக தனிப்பாதை சுமார் 2 கி.மீ நீளத்திற்கு ரூ50 லட்சத்தில் அமைக்கப்படுகிறது. இந்த பணி வரும் ஜனவரி முதல் வாரத்தில் முடிக்கப்பட்டு திறக்கப்படும்.

அதே போன்று மெரினா கடற்கரையில் கலங்கரை விளக்கம் முதல் நேப்பியர் பாலம் வரையிலுள்ள சர்வீஸ் சாலையில் சுமார் 3 கி.மீ நீளத்திற்கு சைக்கிள் பாதை கட்டுதல், இயக்குதல், பின் ஒப்படைத்தல் என்கிற முறையில் ஒப்பந்தங்கள் கோரப்பட்டு, பரிசீலனையில் உள்ளது. இந்த திட்டமும் மிக விரைவில் செயல்பாட்டுக்கு வரும். இது போன்ற நடவடிக்கைகள் மூலம் சுற்றுச்சூழல் பாதுகாக்கப்படும். இவ்வாறு மேயர் பேசினார்.