Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

கொடைக்கானல் பகுதியில் ரூ. 3 கோடியில் வளர்ச்சிப் பணி

Print PDF

தினமணி 25.08.2009

கொடைக்கானல் பகுதியில் ரூ. 3 கோடியில் வளர்ச்சிப் பணி

கொடைக்கானல், ஆக. 24: கொடைக்கானலில் நடைபெற்றுவரும் பல்வேறு வளர்ச்சிப் பணிகளைப் பார்வையிட்டு அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் ம. வள்ளலார்.

மேலும் ஏரிச்சாலை, உழவர் சந்தை ஆகிய இடங்களைப் பார்வையிட்டு முழுமையான முறையில் பணிகள் நடைபெற அதிகாரிகள் உதவ வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

இந் நிகழ்ச்சியில், வருவாய் கோட்டாட்சியர் ஞானசேகரன், வட்டாட்சியர் உதயக்குமார், நகரமைப்பு அலுவலர் சீனிவாசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

அதனைத் தொடர்ந்து ஆட்சியர் கூறியதாவது:

சுற்றுலாப் பயணிகளின் வசதிக்காகவும், அதிகமாக வருவதற்காகவும் கொடைக்கானலில் பல்வேறு வளர்ச்சிப் பணிகள் நடைபெற்று வருகின்றன. ஏரியைச் சுற்றியுள்ள கழிவுகளை அகற்றும் பணிக்காக ரூ. 9 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணி நடைபெற்று வருகிறது.

மேலும் ஏரியின் அழகை ரசிப்பதற்காக ரூ. 5 லட்சம் செலவில் அழகு இருக்கைகள் அமைக்கப்பட உள்ளன.

ஆபத்து ஏற்படுத்தும் வகையில் உள்ள பழமையான படகு குழாம் கட்டடம் இடிக்கப்படும். சுற்றுலாப் பயணிகளை ஏமாற்றும் வகையிலும், அரசுக்கு வருவாய் இழப்பீடு செய்யும் வகையில் அனுமதியின்றி நடத்தப்படும் காட்டேஜ்கள், லாட்ஜ்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

சுற்றுலாப் பயணிகளுக்கு சேவை நோக்கத்துடன் பணியாற்றுவதற்காக சுற்றுலா வழிகாட்டிகளுக்குப் பயிற்சி அளிக்கப்பட்டு, சீருடை அடையாள அட்டை வழங்கப்படும்.

கொடைக்கானல் ஒன்றியப் பகுதிகளில் பல்வேறு அடிப்படை வசதிகள் செய்து கொடுப்பதற்காக ரூ. 3 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. சுற்றுச் சூழல் பாதிக்கும் வகையில் பாறைகளை வெடிவைத்து உடைப்பவர்கள் மீதும், பிளாஸ்டிக் பொருள்கள் பயன்படுத்தும் ஹோட்டல் நிறுவனங்கள் மீதும், அனுமதியின்றி டாஸ்மாக் பார் நடத்துபவர்கள் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.