Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

கல்யாண் மாநகராட்சியில் சிவசேனா மேயர் பதவியேற்பார்

Print PDF

தினகரன்                 08.11.2010

கல்யாண் மாநகராட்சியில் சிவசேனா மேயர் பதவியேற்பார்

கல்யாண், நவ.8: கல்யாண்&டோம்பிவலி மாநகராட்சியில் சிவசேனா கட்சி தனது பெரும்பான்மையை நிரூபிக்க இன்னும் சில நாட்களே உள்ளன. இந்த நிலையில், தமது கட்சி பெரும்பான்மையை நிரூபித்து காட்டும் என தாம் உறுதியாக நம்புவதாக சிவசேனா செயல் தலைவர் உத்தவ் தாக்கரே கூறியுள்ளார்.

சமீபத்தில் நடந்த கல்யாண்&டோம்பிவலி மாநகராட்சி தேர்தலில் சிவசேனாவுக்கும் ராஜ்தாக்கரே தலைமையிலான மகாராஷ்டிரா நவ நிர்மாண் சேனாவுக்கும் இடையே கடும் போட்டி காணப்பட்டதால் இந்த தேர்தல் மாநிலம் முழுவதும் அனைவரது கவனத்தையும் ஈர்த்தது. ஆனால் தேர்தல் முடிவுகள் வெளியானபோது எந்த கட்சிக்கும் அல்லது கூட்டணிக்கும் மெஜாரிட்டி கிடைக்கவில்லை.

107 உறுப்பினர்களைக் கொண்ட இந்த மாநகராட்சியில் மெஜாரிட்டியை நிரூபிக்க 54 உறுப்பினர்களின் ஆதரவு தேவை. இதில் கூட்டணி கட்சிகளான சிவசேனாவும் பா.ஜ.வும் 40 இடங்களை (சேனா&31, பா.ஜ. 9) கைப்பற்றின. நவ நிர்மாண் சேனா 27 இடங்களில் வெற்றி பெற்று இரண்டாவது இடத்தில் வந்தது. காங்கிரஸ் 15 இடங்களிலும் தேசியவாத காங்கிரஸ் 14 இடங்களிலும் வெற்றி பெற்றன. சுயேட்சைகள் 11 பேர் வெற்றி பெற்றனர்.

இதை வைத்து பார்க்கும்போது, சிவசேனா&பா.. கூட்டணிக்கு 11 சுயேட்சைகளும் ஆதரவு அளித்தாலும்கூட மொத்த எண்ணிக்கை 51&தான் வருகிறது. மெஜாரிட்டிக்கு இன்னும் 3 இடங்கள் தேவை.

நவ நிர்மாண் சேனாவுக்கு மேயர் பதவி கிடைக்க வேண்டுமானால் காங்கிரஸ்&தேசியவாத காங்கிரஸ் கூட்டணியின் ஆதரவை பெற வேண்டும். ஆனால் மாநகராட்சியில் எதிர்கட்சி வரிசையில் அமரப்போவதாக காங்கிரஸ் ஏற்கனவே அறிவித்து இருக்கிறது.

இந்த நிலையில் சிவசேனா நிச்சயமாக மேயர் பதவியை கைப்பற்றும் என உத்தவ் தாக்கரே கூறியிருக்கிறார்.

இது குறித்து அவர் நிருபர்களிடம் கூறுகையில், "கல்யாணில் சிவசேனா மேயர்தான் பதவியேற்பார். மேயர் தேர்தலில் எங்கள் கட்சி உறுப்பினர்கள் வெற்றிபெற்று காட்டுவார்கள். மெஜாரிட்டியை எப்படி நிரூபிக்கப் போகிறோம் என்பதை வரும் 12ம் தேதி பார்ப்பீர்கள்Ó என்றார்.

ஆனால் இந்த விவகாரத்தில் சிவசேனாவுக்கும் தேசியவாத காங்கிரசுக்கும் இடையே ரகசிய உடன்பாடு ஏற்பட்டு இருப்பதாக உத்தவ் தாக்கரேக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்தன. வாக்கெடுப்பின்போது தேசியவாத காங்கிரஸ் உறுப்பினர்கள் அதில் பங்கேற்கமாட்டார்கள் என்றும் எனவே மீதமுள்ள உறுப்பினர்களில் சிவசேனாவுக்கு மெஜாரிட்டி கிடைத்துவிடும் என்றும் அந்த வட்டாரங்கள் கூறின.

தேசியவாத காங்கிரஸ் உறுப்பினர்கள் வாக்கெடுப்பில் கலந்துகொள்ளவில்லை என்றால் மீதமுள்ள 93 உறுப்பினர்களில் மெஜாரிட்டிக்கு 47 பேரின் ஆதரவு இருந்தால் போதும் என்பது குறிப்பிடத்தக்கது.

Last Updated on Monday, 08 November 2010 05:38