Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

பெங்களூர் மாநகராட்சி வார்டு இடஒதுக்கீடு பட்டியல் புதிதாக தயாரிக்கப்படும்

Print PDF

தினமணி 25.08.2009

பெங்களூர் மாநகராட்சி வார்டு இடஒதுக்கீடு பட்டியல் புதிதாக தயாரிக்கப்படும்

பெங்களூர், ஆக. 24: பெங்களூர் மாநகராட்சி வார்டுகளின் இட ஒதுக்கீடு பட்டியல் புதிதாக தயாரிக்கப்பட்டு உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என்று குடிநீர் மற்றும் செய்தித் துறை அமைச்சர் கட்டா சுப்பிரமணிய நாயுடு தெரிவித்தார்.

பெங்களூர் சதாசிவநகர் பகுதியில் உள்ள சாங்கே ஏரியில் பொதுமக்கள் வசதிக்காக சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதியை திங்கள்கிழமை துவக்கிவைத்தார் கட்டா சுப்பிரமணிய நாயுடு.

அப்போது அவர் நிருபர்களிடம் கூறியது:

பெங்களூர் பெருநகர மாநகராட்சி வார்டுகள் எண்ணிக்கை 198 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. மாநகராட்சி மன்றத்துக்குத் தேர்தல் நடத்த வசதியாக இந்த 198 வார்டுகளுக்கும் இட ஒதுக்கீடு செய்து ஆகஸ்ட் 22-ம் தேதி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இந்தப் பட்டியல் அவசரமாக தயாரித்து அதிகாரிகளால் வெளியிடப்பட்டுள்ளது. இந்தப் பட்டியலில் பல குளறுபடிகள் உள்ளன. எனவே, ஆகஸ்ட் 22-ம் தேதி வெளியிடப்பட்ட இடஒதுக்கீடு பட்டியல் வாபஸ் பெறப்பட்டு புதிய பட்டியல் விரைவில் தயாரிக்கப்படும்.

இந்தப்பட்டியல் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு, உயர்நீதிமன்றம் விதித்துள்ள காலக்கெடுவுக்குள் மாநகராட்சி மன்றத்துக்குத் தேர்தல் நடத்தப்படும்.

ஆட்சேபமில்லை: சட்டப்பேரவை இடைத்தேர்தலில் போட்டியிட்ட வீட்டு வசதி துறை அமைச்சர் வி.சோமண்ணா தோல்வி அடைந்துவிட்டார். இது மிகவும் வருத்தத்தை அளிக்கிறது.

இதனால் அவர் அமைச்சர் பதவியை ராஜிநாமா செய்ய வேண்டும் என சிலர் வலியுறுத்துகிறார்கள்.

அமைச்சர் பதவியில் சோமண்ணா நீடிக்க வேண்டுமா, வேண்டாமா என்பதை பாஜக கட்சித் தலைவர்கள் கூடி முடிவு செய்வார்கள்.

என்னைப் பொறுத்தவரை அவர் அமைச்சர் பதவியில் நீடிக்க ஆட்சேபமில்லை.

மழை நீர் சேமிப்பு கட்டாயம்: மழை நீர் சேமிப்பு திட்டம் புதிய கட்டடங்களில் கட்டாயமாக அமல்படுத்தப்பட வேண்டும்.

வருகிற செப்டம்பர் மாதம் முதல் 3 மாதங்கள் இத்திட்டத்தை நகரில் அமல்படுத்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும்.

உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி, முதல்வர், எதிர்க்கட்சித் தலைவர் இல்லங்களில் மழை நீர் சேகரிப்புத் திட்டம் துவக்கப்படவுள்ளது என்றார் அவர்.