Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

குப்பை கொட்ட இடம்: கவுன்சிலர்கள் ஆலோசனை

Print PDF

தினமணி             11.11.2010

குப்பை கொட்ட இடம்: கவுன்சிலர்கள் ஆலோசனை

பண்ருட்டி, நவ. 10: பண்ருட்டி நகராட்சியில் சேகரிக்கப்படும் குப்பைகளை கொட்ட தாற்காலிக தீர்வு காண்பதற்கான ஆலோசனைக் கூட்டம் நகராட்சி அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நடந்தது.

÷நகராட்சி ஆணையர் கே.உமாமகேஸ்வரி தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் நகர மன்றத் தலைவர் எம்.பச்சையப்பன், துணைத் தலைவர் கே.கோதண்டபாணி மற்றும் திருவதிகை பகுதியைச் சேர்ந்த இந்நாள், முன்னாள் கவுன்சிலர்கள் கலந்துகொண்டனர்.

÷பண்ருட்டி நகரப் பகுதியில் சேகரிக்கப்படும் குப்பைகளைக் கொட்ட இடமின்றி நகர நிர்வாகம் ஆறு, குளம் உள்ளிட்ட பொது இடத்தில் கொட்டி பொது சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்தி வந்தது. மேலும் பல ஆண்டுகளாக முயற்சித்தும் குப்பை கொட்டுவதற்கென நிலையான ஒரு இடத்தை நகர மற்றும் மாவட்ட நிர்வாகத்தால் வாங்க முடியவில்லை. இதுகுறித்து "குப்பைகளால் பொலிவிழந்து காணப்படும் பண்ருட்டி' என்ற தலைப்பில் திங்கள்கிழமை தினமணி நாளிதழ் செய்தி வெளியிட்டிருந்தது.

÷இச்செய்தியைத் தொடர்ந்து தாற்காலிகமாக குப்பைகளை திருவதிகை பகுதியில் உள்ள சுடுகாடு அருகே கொட்டுவது தொடர்பாக அப்பகுதி கவுன்சிலர்கள் முருகன், கார்த்திக், கதிரேசன், முன்னாள் கவுன்சிலர்கள் அன்பழகன், பட்டுசாமி உள்ளிட்டோருடன் கலந்து ஆலோசிக்கப்பட்டது. இதற்கு அவர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் தீர்வு ஏதும் ஏற்படாமல் கூட்டம் முடிவடைந்தது. ÷இதுகுறித்து நகராட்சி ஆணையர் கே.உமாமகேஸ்வரியை கேட்டதற்கு அவர் கூறியது:

÷பண்ருட்டி பகுதியில் சேகரிக்கப்படும் குப்பைகளை திருவதிகை மற்றும் மணி நகர் பகுதியில் கொட்ட தீர்மானிக்கப்பட்டது. முன்னரே மணிநகர் பகுதியில் உரம் தயாரிப்பதற்கான கட்டமைப்பு வசதிகள் செய்யப்பட்டுள்ளன. இதனை நடைமுறைப்படுத்த உள்ளோம். இதற்கான டெண்டர் விடப்பட்டுள்ள நிலையில் பணி ஆணை வந்தவுடன் செயல்பட தொடங்கும். திருவதிகை பகுதியில் குப்பை கொட்ட அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் சம்மதிக்கவில்லை என ஆணையர் கூறினார்.