Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

டெண்டர் முறையில் புதிய நடைமுறை சாலைப் பணிகள் முடக்கம்

Print PDF

தினமணி                       18.11.2010

டெண்டர் முறையில் புதிய நடைமுறை சாலைப் பணிகள் முடக்கம்

தென்காசி : கட்டுமானப் பொருள்களின் கடும் விலை உயர்வு, தொழிலாளர்களின் கூலி உயர்வு, மணல் தட்டுப்பாடு போன்ற காரணங்களால், சாலைப் பணிகளை டெண்டர் எடுக்க ஒப்பந்ததாரர்கள் முன்வருவதில்லை. இதனால், அரசு நிதி ஒதுக்கீடு செய்தும் பணிகள் நடைபெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் உள்ளாட்சி அமைப்புகளில் சாலை வசதிகளை மேம்படுத்தும் வகையில், தமிழக அரசு கடந்த மாதம் ரூ 1000 கோடி நிதி ஒதுக்கீடு செய்தது. இந்த நிதியில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிப் பகுதிகளில் சாலை அமைத்தல், சேதமடைந்த சாலைகளைச் சீரமைத்தல் ஆகிய பணிகளுக்காக, தேவையின் அடிப்படையில் முன்னுரிமை வழங்கப்பட்டு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. அந்த வகையில் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள 36 பேரூராட்சிகளுக்கு ரூ 25 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் இந்தச் சாலைப் பணிகளுக்கு டெண்டர்கள் விடப்பட்டுள்ளன. வழக்கமாக மற்ற பணிகளைக் காட்டிலும், சாலை அமைக்கும் பணிக்கு ஒப்பந்ததாரர்கள் இடையே கடும் போட்டி நிலவும். ஆனால், இப்போது அறிவிக்கப்பட்டுள்ள சாலைப் பணிகளை மேற்கொள்வதற்கு திருநெல்வேலி உள்பட பல மாவட்டங்களில் ஒப்பந்ததாரர்கள் பெரிய அளவில் ஆர்வம் காட்டவில்லை எனக் கூறப்படுகிறது.

சாலைப் பணிகளை மேற்கொள்வதற்கு இதுவரை இல்லாத வகையில் புதிய முறையில் டெண்டர் விடப்பட்டது, கட்டுமானப் பொருள்களின் விலை உயர்வு போன்றவையே இதற்குக் காரணமாகும்.

வழக்கமாக, ஒரு தெருவுக்கு சாலை அமைக்க வேண்டும் என்றால், அந்தத் தெருவுக்கு மட்டும் தனியாக டெண்டர் விடப்படும். உள்ளூர் ஒப்பந்ததாரர்களே இப் பணியைச் செய்துவிடமுடியும்.

ஆனால், இப்போது "பேக்கேஜ்' என்ற முறையில் டெண்டர் விடப்பட்டுள்ளது. இந்த முறையில் பணிகளைச் செய்ய பெரிய அளவிலான ஒப்பந்ததாரர்களால் மட்டுமே முடியும் என்ற நிலை நிலவுகிறது. சுடுகலவை இயந்திரம் (சிஎம்பி) போன்ற இயந்திரம் உள்ளவர்கள் மட்டுமே இந்த டெண்டர்களில் கலந்துகொள்வதற்கு தகுதியுடையவர்கள் ஆவர்.

திருநெல்வேலி மாவட்டத்தைப் பொருத்தவரை இப்போது டெண்டர் விடப்பட்டுள்ள பணிகளைச் செய்வதற்கு சிலர் மட்டுமே தகுதியுடையவர்கள் ஆவர். ஆனால், அவர்களே மாவட்டம் முழுவதும் பணிகளை மேற்கொள்ள முடியாது என்பதும் சாலைப் பணிகள் நடைபெறாததற்கு ஒரு காரணம்.

மேலும், தாமிரபரணி கரையோரம் செயல்படும் மணல்குவாரிகளைக் கருத்தில்கொண்டே இந்த டெண்டர்களை அரசு அறிவித்துள்ளது. ஒரு யூனிட் மணலுக்கு அரசு நிர்ணயித்துள்ள கட்டணம் ரூ1340. ஆனால், சந்தையில் ஒரு யூனிட் மணலின் விலை ரூ 2800.

தாமிரபரணியில் மணல் அள்ளுவதற்கு உயர் நீதிமன்ற மதுரைக் கிளை தடைவிதித்துள்ளதால், சிவகாசி, விளாத்திகுளம் ஆகிய பகுதிகளில் இருந்துதான் மணல் கொண்டுவர வேண்டும். இதனால் மணலின் விலை மேலும் அதிகரிக்கும்.

டெண்டரில் அரசு ஒரு மூட்டை சிமென்டுக்கு நிர்ணயித்துள்ள விலை ரூ 233. சந்தையில் விலை ரூ 265 முதல் ரூ 285 வரை உள்ளது. தொழிலாளர்களின் ஊதியம் மற்றும் கட்டுமானப் பொருள்களின் விலையும், அரசு நிர்ணயித்துள்ளதைவிட அதிகமாகவே உள்ளது.

இதனால் முதல்கட்டமாக அறிவித்த டெண்டரில், திருநெல்வேலி மாவட்டத்தில் இலஞ்சி, சாம்பவர்வடகரை, மேலகரம், குற்றாலம் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட பேரூராட்சிகளில் பணிகளை எடுப்பதற்கு யாரும் முன்வரவில்லை. இப்போது இரண்டாவது முறையாக டெண்டர் விடப்பட்டுள்ளது. இந்த முறையும் பணிகளை எடுப்பதற்கு பெரிய அளவில் யாரும் ஆர்வம் காட்டவில்லை என ஒப்பந்ததாரர்கள் தெரிவித்தனர்.

எனவே, "பேக்கேஜ்' முறையில் பணிகளை டெண்டர்விடும் முறையை மாற்றி, சிறு சிறு பணிகளாக மாற்றியும், அரசு நிர்ணயித்துள்ள கட்டுமானப் பொருள்களின் விலையை அதிகரித்து, புதிய விலையை நிர்ணயித்தும் டெண்டர் விடவேண்டும் என ஒப்பந்ததாரர்கள் எதிர்பார்க்கின்றனர். ஆனால், அரசு நிர்ணயித்துள்ள கட்டணமே தொடருமானால், பணிகளின் தரத்தை ஒப்பந்ததாரர்கள் குறைத்துவிடும் சூழ்நிலை ஏற்படும்.