Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

ஆக்கிரமிப்புகளை அகற்றுதல் தொடர்பான ஆலோசனைக் கூட்டம்

Print PDF

தினமணி           23.11.2010

ஆக்கிரமிப்புகளை அகற்றுதல் தொடர்பான ஆலோசனைக் கூட்டம்

பெரம்பலூர், அக். 22: பெரம்பலூர் சங்குப்பேட்டையில் உள்ள சமுதாயக் கூடத்தில் நகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் ஆக்கிரமிப்புகளை அகற்றுவது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு தலைமை வகித்து நகராட்சி ஆணையர் போ.வி. சுரேந்திரஷா பேசியது:

நகராட்சிக்கு உள்பட்ட பழைய பேருந்து நிலையம், புதிய பேருந்து நிலையம் கடைவீதி, காமராஜர் வளைவு, அஞ்சல் அலுவலகத் தெரு உள்ளிட்ட பகுதிகளில் வணிக நிறுவனங்களுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களைத் தவிர, பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் ஆக்கிரமிப்புகள் செய்யப்பட்டுள்ளது.

இதனால், போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு பொதுமக்கள் பாதிக்கப்படுகின்றனர். குறிப்பாக, புதிய பேருந்து நிலையத்தில் பயணிகள் நடைபாதையில் வியாபாரிகள் முற்றிலும் ஆக்கிரமிப்பு செய்துள்ளனர்.

இதனால், அப் பகுதியில் பயணிகளுக்கு இடையூறு ஏற்பட்டு வருகிறது. எனவே, கடை உரிமையாளர்களுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களைத் தவிர, ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ள பகுதிகளை, சம்பந்தப்பட்ட உரிமையாளர்களே அகற்ற வேண்டும். மேலும், பேருந்து நிலையங்களில் சுற்றுச் சூழலை மேம்படுத்தி, சுகாதாரத்தை வளர்க்க அனைத்துத் தரப்பினரும் ஒத்துழைக்க வேண்டும் என்றார் அவர்.

கூட்டத்தில் வட்டாட்சியர் கு. கார்த்திகேயன், போக்குவரத்து ஆய்வாளர் ராஜாராம், அரசுப் போக்குவரத்துக் கழக கிளை மேலாளர் ஞானமூர்த்தி, புதிய பேருந்து நிலைய வியாபாரிகள் சங்கத் தலைவர் வைத்தீஸ்வரன், பழைய பேருந்து நிலைய வியாபாரிகள் சங்கத் தலைவர் சரவணன் மற்றும் கட்டட உரிமையாளர்கள், வியாபாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.