Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

மாசுபடும் மாநகராட்சி குளங்கள்

Print PDF

தினமணி            23.11.2010

மாசுபடும் மாநகராட்சி குளங்கள்

கோவை, நவ. 21: கோவை மாநகராட்சி பகுதியில் உள்ள குளங்கள் கனமழையால் நிரம்பியுள்ள நிலையில், மழைநீருடன் சாயக் கழிவுநீர், சாக்கடைக் கழிவுகள் கலந்து குளங்கள் மாசுபட்டுக் காணப்படுகின்றன.

நிலத்தடி நீர்மட்டம் உயர்வதற்கும், விவசாயத்துக்கும், மீன் வளர்ப்புக்கும் பயன்படும் குளங்கள், மழைக்காலங்களில் தண்ணீரை உள்வாங்கி வெள்ளப்பெருக்கு ஏற்படாமல் பேருதவியாக இருக்கின்றன. குளங்களைத் தேடி உள்நாட்டு பறவைகள், வெளிநாட்டுப் பறவைகள் ஆண்டுதோறும் குறிப்பிட்ட சீதோஷ்ண காலத்தில் வந்துசெல்கின்றன. சுற்றுச்சூழல் மற்றும் உயிரினங்களின் வாழ்வாதாரத்துக்கு குளங்கள், ஏரிகள், நீர்நிலைகளின் பங்கு இன்றியமையாததாக உள்ளது.

குளங்களின் பரப்பளவு: கோவை மாநகராட்சி பகுதியில் எட்டு குளங்கள் அமைந்துள்ளன. வீரகேரளத்திற்கு அருகிலுள்ள நரசம்பதி குளம் 123 ஏக்கர் பரப்பளவுடன் அதிகபட்சமாக 11 மீட்டர் ஆழத்துடன் காணப்படுகிறது. இதற்கு அருகில் உள்ள கிருஷ்ணம்பதி குளம் 178 ஏக்கர் பரப்பளவுடன் 11 மீட்டர் ஆழம் கொண்டுள்ளது.

செல்வம்பதி குளம் 71 ஏக்கர் பரபரப்பள, 11 மீட்டர் ஆழத்துடனும், குமாரசாமி குளம் (முத்தண்ணன் குளம்) 94 ஏக்கர் பரப்பளவு, 10 மீட்டர் ஆழத்துடனும் உள்ளன. செல்வசிந்தாமணிக் குளம் 37 ஏக்கர் பரப்பளவு, 6 மீட்டர் ஆழத்துடன் காணப்படுகிறது. உக்கடம் பெரியகுளத்தின் பரப்பளவு 337 ஏக்கராகும். இதன் ஆழம் 19 மீட்டர்.

வாலாங்குளம் 160 ஏக்கர் பரப்பளவு 14.75 மீட்டர் ஆழம் கொண்டது. சிங்காநல்லூர் குளம் 288 ஏக்கர் பரப்பளவு, 4.5 மீட்டர் ஆழம் கொண்டதாக அமைந்துள்ளது. இக்குளங்களில் 7 குளங்கள் நிரம்பிவிட்டன. செல்வசிந்தாமணிக் குளம் மட்டும் இன்னும் நிரம்பவில்லை. இக்குளங்களுக்கு மழைத் தண்ணீருடன், சாயக்கழிவுநீரும், சாக்கடைக் கழிவுகளும் அதிகஅளவில் கலந்து வருவதால் குளங்கள் மாசுபடுகின்றன.

சாயக்கழிவுகள்: தெலுங்குபாளையம், சுக்கிரவாரப்பேட்டை பகுதியிலுள்ள பல வீடுகளில் நூல் சாயமிடும் வேலை நடக்கிறது. இங்கிருந்து வெளியேறும் சாயக் கழிவுநீர், சாயக் கழிவுகள் மற்றும் செல்வபுரம் பகுதியில், சாக்கடைக் கால்வாய் வண்டலிலிருந்து தங்கத்துகள் பிரித்தெடுக்க பயன்படுத்தப்படும் பாதரச ரசாயன கழிவுகள் அனைத்தும் மழை தண்ணீரில் அடித்துச்செல்லப்பட்டு குளங்களில் சேகரமாகின்றன.

சாக்கடைக் கால்வாய்களில் அடைபட்டுக் கிடந்த கழிவுகள் அனைத்தும் மழை வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு குளங்களில் சங்கமமாகி, மாசுபட்டுக் காணப்படுகின்றன. செல்வசிந்தாமணிக் குளம், முத்தண்ணன் குளத்தில் சாயக்கழிவுநீர் கலந்து நுரைபொங்கிக் காணப்படுகிறது.

ஆக்கிரமிப்பு: குளங்களையொட்டி இடத்தை ஆக்கிரமித்துக் குடியிருக்கும் மக்களாலும் பிளாஸ்டிக் கழிவுகள் உள்பட பலவிதமான கழிவுகள் குளங்களில் சேர்கின்றன. மாநகராட்சிப் பகுதியிலுள்ள குளங்களுக்கு அருகே 3,500க்கு மேற்பட்ட குடும்பங்கள் வசிப்பதாக மாநகராட்சி கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது.

குளம் உள்ளிட்ட நீர்நிலைகளை ஆக்கிரமித்து குடியிருப்பது சட்டத்திற்குப்

புறம்பானது. மழைக்காலங்களில் குளங்கள் நிரம்பி அருகிலுள்ள குடியிருப்புகளுக்குள் மழைநீர் புகுந்துவிடுகிறது.

வாலாங்குளத்தை ஒட்டியுள்ள பாரதிதாசன் நகருக்குள் குளத்தண்ணீர் புகுந்து, வீடுகளைச் சுற்றிலும் தண்ணீர் சூழ்ந்தது. இங்கிருந்து தண்ணீர் வெளியேறுவதற்கான பாதையும் அடைபட்டு கிடக்கிறது. மாற்றுஇடம் கோரி இப்பகுதி மக்கள் சாலை மறியல் போராட்டம் நடத்தினர்.

குளங்களையொட்டி வசிக்கும் மக்களுக்கு மாற்றுஇடம் கொடுத்து வெளியேற்றி,

குளங்களை வேலியிட்டுப் பாதுகாக்க வேண்டும் என்று சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் எதிர்பாக்கின்றனர்.

குடிநீர் மற்றும் விவசாயத்திற்காக பயன்பட்டுவந்த ஓடை, குளம் போன்ற நீர் நிலைகள் மாசுபடுமானால் எதிர்காலத்தில் குடிநீருக்குத் தட்டுப்பாடும் நெருக்கடியும் ஏற்படும் என்பதை அனைவரும் உணர வேண்டும்.

கோவை மாநகராட்சி, நகராட்சிகள், பேரூராட்சிகளிலிருந்து வெளியேற்றப்படும கழிவுநீர், குளங்களில் சேர்வதை தடுக்க வேண்டும் என்று சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு கோரிக்கை மனுக்களை தொடர்ந்து கொடுத்துக்கொண்டே தான் உள்ளனர்.

குளங்கள் மாசுபாடு குறித்து பொதுப்பணித்துறை சுற்றுச்சூழல் குழும கோட்ட செயற்பொறியாளர் இரா. இளங்கோவனிடம் கேட்டபோது, பலவிதமான ஆய்வுகள் மூலமாக குளங்களின் குணங்கள் கண்டறியப்படுகின்றன.

குளங்களில் மாசு கோடைக்காலத்தில் அதிகஅளவில் காணப்படும். தற்போது பெய்துவரும் மழை காரணமாக மாநகராட்சிப் பகுதிகளில் உள்ள குளங்களில், மாசுத் தன்மை தண்ணீர் பெருக்கத்தால் சமன்படுத்தப்பட்டுள்ளது.

பொதுவாக, குளம் மாசுபட்டுள்ள தன்மை வெளியே தெரியாத வகையில் இருக்கும். எப்போதாவது திடீரென அதன் பாதிப்புகள் வெளிப்படலாம். நீர்நிலைகளைக் காப்பாற்ற வேண்டும் என்ற உணர்வுடன் அனைத்துத் தரப்பினரும் இணைந்து செயல்படவேண்டியது அவசியம் என்றார்.