Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

"பாதிப்பை சமாளிக்க தயார் நிலையில் மாநகராட்சி'

Print PDF

தினமணி           24.11.2010

"பாதிப்பை சமாளிக்க தயார் நிலையில் மாநகராட்சி'

மதுரை, நவ. 23: கனமழை காரணமாக மதுரை பகுதிகளில் வெள்ள அபாயம் ஏற்பட்டால், தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட மாநகராட்சி நிர்வாகம் 24 மணி நேரமும் தயாராக உள்ளது. இது தொடர்பாக விழிப்புடன் இருக்கும்படி அனைத்து அதிகாரிகளுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது என ஆணையர் செபாஸ்டின் தெரிவித்தார்.

கனமழையால் போடிலைன், முத்துப்பட்டி, மாடக்குளம், பைக்காரா, செல்லூர், பந்தல்குடி ஆகிய குடியிருப்பு பகுதிகளில் மழைநீர் சூழ்ந்தது. குறிப்பாக போடி லைன் பகுதியில் 50-க்கும் மேற்பட்ட வீடுகளில் மழைநீர் சூழ்ந்தது.

தகவலறிந்த மேயர் கோ. தேன்மொழி, கமிஷனர் எஸ். செபாஸ்டின், துணை மேயர் பி.எம். மன்னன் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் குழு சம்பந்தப்பட்ட பகுதிகளில் செவ்வாய்க்கிழமை நேரில் ஆய்வு செய்தது.

அப்போது கமிஷனர் எஸ்.செபாஸ்டின் செய்தியாளர்களிடம் கூறியது:

தொடர்மழை காரணமாக மதுரை மாநகராட்சி பகுதியிலுள்ள கண்மாய்கள் மற்றும் வாய்க்கால்கள் நிரம்பி வழிகின்றன. வைகை ஆற்றில் வெள்ள அபாயம் ஏற்பட்டுள்ளது.

ஆற்றின் கரையோரங்களில் வசிப்பவர்களை பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. வெள்ள அபாயம் ஏற்பட்டால் தாழ்வான இடங்களில் மழைநீரை உடனுக்குடன் அப்புறப்படுத்த, டீசல் மோட்டார்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

200-க்கும் மேற்பட்ட மணல் மூட்டைகள், தாற்காலிக மையங்கள் அமைத்தல், மழைநீர் வடிகால் வாய்க்கால் சுத்தம் செய்தல், சாலைகளில் மரம் விழுந்தால் உடனுக்குடன் அப்புறப்படுத்துதல், தயார் நிலையில் ஆம்புலன்ஸ் வண்டிகள், கட்டுப்பாட்டு அறை அமைத்தல், திருமண மண்டபங்களில் மக்களை தங்க வைப்பது உள்ளிட்ட பல்வேறு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. மழைக் காலத்தில் 24 மணி நேரமும் மாநகராட்சி அதிகாரிகள் தயார் நிலையில் இருக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும், போடிலைன் பகுதியில் வீடுகளில் தேங்கியிருந்த மழைநீரை, கிருதுமால் வாய்க்காலில் கொண்டு செல்லத் தேவையான நடவடிக்கை எடுக்கவும், மழைநீர் தேங்காத வகையில் வாய்க்கால்களை சுத்தம் செய்யவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

முத்துப்பட்டி, மாடக்குளம், செல்லூர் பந்தல்குடி ஆகிய பகுதிகளில் கண்மாய்களில் நிரம்பி வெளியேறும் நீரினை, மழைநீர் வடிகால் வாய்க்கால் வழியாக வெளியேற்ற பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன என்றார்.

ஆய்வின்போது, சட்டப்பேரவை உறுப்பினர்கள் கே.எஸ்.கே. ராஜேந்திரன், கெüஸ்பாஷா, தலைமைப் பொறியாளர் சக்திவேல், கண்காணிப்புப் பொறியாளர் விஜயகுமார், மக்கள் தொடர்பு அலுவலர் ரா.பாஸ்கரன், மண்டலத் தலைவர்கள் நாகராஜன், மாணிக்கம் உள்ளிட்டோர் உடன் சென்றனர்.