Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

4 1/2 ஆண்டுகளில் 4.80 லட்சம் பேர் பணி நியமனம்; மு.க. ஸ்டாலின் தகவல்

Print PDF

மாலை மலர்              24.11.2010

4 1/2 ஆண்டுகளில் 4.80 லட்சம் பேர் பணி நியமனம்; மு.க. ஸ்டாலின் தகவல்

4 1/2 ஆண்டுகளில்
 
 4.80 லட்சம் பேர்
 
 பணி நியமனம்;
 
 மு.க. ஸ்டாலின் தகவல்

சென்னை, நவ. 24- சென்னை மாநகராட்சி சார்பில் தியாகராய நகர் சர்.பிட்டி தியாகராயர் கலையரங்கில் பணி நியமன ஆணைகள் வழங்கும் விழா இன்று நடந்தது.

இதில் துணை முதல்- அமைச்சர் மு.. ஸ்டாலின் கலந்து கொண்டு மலேரியா தொழிலாளர்கள் மற்றும் மின் தொழிலாளர்களுக்கு பணி நியமன ஆணைகளையும், வாழ்த்துக் கடிதங்களையும் வழங்கினார். 413 பேர்களுக்கு பணி நியமன ஆணைகளை அவர் வழங்கினார்.

பின்னர் மு..ஸ்டாலின் பேசியதாவது:-

சென்னை மாநகராட்சியில் பொது சுகாதாரத்துறையில் 238 பேர்களுக்கு மலேரியா தொழிலாளர்களாகவும், மின்துறையில் 175 பேர்களுக்கு மின் தொழிலாளர்களாவும் என மொத்தம் 413 பேர்களுக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்படுகிறது.

கடந்த கால ஆட்சியில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் பல கொடுமைகளை சந்தித்தார்கள். பலரை பணியிலிருந்து நீக்கம் செய்தது, வாரிசு தாரர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கவில்லை, பொதுவாக அரசு ஊழியர்களை மதிக்காத அரசாக செயல்பட்டது, கோரிக்கைகளை வலியுறுத்தி போராட முன்வந்தவர்களை இரவோடு இரவாக கொள்ளையர்களை பிடிப்பது போல் சிறையில் அடைத்த கொடுமைகள் நடந்தது. அந்த சர்வாதிகார ஆட்சியில் எஸ்மா, டெஸ்மா சட்டங்கள் கொண்டு வரப்பட்டது. இதனால் 20க்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள் தற்கொலை செய்து கொண்டு இறந்தார்கள்.

இதனால் 2006-ம் ஆண்டு தேர்தல் அறிக்கையில் கலைஞர், அரசு ஊழியர்களை கட்டிக்காப்போம், ஓய்வூதிய தாரர்களின் இன்னல்களை களைவோம், வாரிசுதாரர்களுக்கு வேலை, வேலை நியமன தடைச்சட்டத்தை ரத்து செய்வோம் என்றார். அதன்படி, 5-வது முறையாக கலைஞர் அவர்கள் முதல்-அமைச்சராக பொறுப்பேற்றவுடன் அரசு ஊழியர்களின் இன்னல்களை போக்கி, அனைத்தையும் நிறைவேற்றினார்.

2006-ம் ஆண்டு சென்னை மாநகராட்சி மேயராக மா.சுப்பிரமணியன் பொறுப்பேற்ற பிறகு கலைஞரின் சீரிய நடவடிக் கையாகவும், தமிழக அரசின் அறிவுறுத்தல்படியும் கடந்த 4 வருடங்களில் சென்னை மாநகராட்சி சார்பில் 1266 பேர்களுக்கு கருணை அடிப்படையில் பணி நியமன ஆணைகளும், 1042 பேர்களுக்கு வேலை வாய்ப்பு அலுவலகம் மூலம் நேரடி பணி நியமனமும் வழங்கப்பட்டது. 2016 பேர்கள் சென்னை மாநகராட்சியில் கடந்த 4 வருடங்களில் கால முறை ஊதிய விகிதத்தில் பணி வரன் முறைப்படுத்தப்பட்டார்கள். 2232 பேர்களுக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டு, பணியிடங்கள் நிரப்பப்பட்டும், 10 ஆண்டுகளுக்கு மேல் பணிபுரிந்து வந்த 2310 தினக்கூலி பணியாளர்கள் பணி நிரந்தரம் செய்யப்பட்டுள்ளார்கள். கடந்த 4 வருடங்களில் பல்வேறு நிலைகளில் சென்னை மாநகராட்சியில் 8 ஆயிரத்து 866 பேர் பயனடைந்துள்ளனர். தமிழகத்தில் உள்ள மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகள், ஊராட்சிகள் போன்றவற்றிலும் பணி நியமனம் செய்யப்பட்டுள்ளார்கள்.

கலைஞர் ஆட்சியில் கடந்த 4 வருடங்களில் காவல் துறை மூலம் 27 ஆயிரத்து 189 பேர்களுக்கும், அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் 26 ஆயிரத்து 9 பேர்களுக்கும், வேலை வாய்ப்பு அலுவலகத்தின் மூலம் ஒரு லட்சத்து 14 ஆயிரத்து 338 பேர்களுக்கும், காலமுறை ஊதியம் வழங்கி நிரந்தரம் செய்யப்பட்ட தொகுப்பூதியப்பணியாளர்கள் 3 லட்சத்து 2 ஆயிரத்து 517 பேர்களுக்கும், கருணை அடிப்படை நியமனம் 10 ஆயிரத்து 413 பேர்களுக்கும் என மொத்தம் 4 லட்சத்து 80 ஆயிரத்து 466 பேர் பணி நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த ஆட்சியில் ஒரே நாளில் ஒன்றரை லட்சம் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களை ஒரே கையெழுத்தில் வீட்டிற்கு அனுப்பினார்கள். இந்த ஆட்சியில் கடந்த 4 வருடங்களில் 4 லட்சத்து 80 ஆயிரத்து 466 பேர் பணி நியமனம் செய்யப்பட்டுள்ளார்கள்.

இன்று பணி நியமன ஆணை பெறுபவர்கள், தன்னுடைய பணியின் பொறுப்பை உணர்ந்து, நியமிக்கப்படும் இடங்களில் பணிபுரிய வேண்டும். இடமாற்றம் கோரி சிபாரிசுகளை பிடித்து தவறான போக்கை கடைப்பிடிக்க வேண்டாம். இவ்வாறு அவர் பேசினார்.

மேயர் மா.சுப்பிரமணியன் பேசுகையில், கலைஞர் ஆட்சியில் வாரிசுதாரர்களுக்கு பணி நியமனங்களும், வேலை வாய்ப்பு அலுவலகம் மூலம் பணி நியமனங்களும், பதவி உயர்வுகளும் தடையின்றி வழங்கப்படுகிறது. என்றார்.

இந்நிகழ்ச்சியில் ஆணையாளர் கார்த்திகேயன், துணை மேயர் சத்தியபாமா, மன்ற ஆளுங்கட்சித்தலைவர் ராமலிங்கம், எதிர்க்கட்சித்தலைவர் சைதை ரவி, நியமனக்குழு உறுப்பினர்கள் முத்துக்கிருஷ்ணன், வேலாயுதம், மண்டல குழுத்தலைவர் ஏழுமலை கலந்து கொண்டனர்.